ரேடார் நிறுவி இந்தியாவை கண்காணிக்கும் சீனா; தொடரும் அச்சுறுத்தல்
ரேடார் நிறுவி இந்தியாவை கண்காணிக்கும் சீனா; தொடரும் அச்சுறுத்தல்
ADDED : பிப் 26, 2025 10:33 PM

புதுடில்லி: இந்திய எல்லையில் அதிநவீன ரேடாரை சீனா நிறுவி இருப்பது எல்லையில் அச்சுறுத்தலை உண்டாக்கியுள்ளது.
இந்தியாவுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்னை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 2020, ஜூன் 15ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு வழியாக ஊடுருவ முயன்ற சீன வீரர்களை, இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, இந்தியா - சீனா இடையிலான உறவு மேலும் சிக்கலானது. இந்த சூழலில், கடந்தாண்டு அக்டோபரில், எல்லையில் வீரர்களை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
இந்த நிலையில், இந்திய எல்லையில் உள்ள சீனாவின் யுனான் பகுதியில் அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட ரேடாரை சீனா நிறுவியிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 5000 கி.மீ., தொலைவு வரை கண்காணிக்கும் திறன் கொண்ட இந்த ரேடார் இந்தியாவின் ஏவுகணை சோதனை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்திய பெருங்கடலின் ஒரு பகுதியும், இந்தியாவின் முக்கிய பகுதிகளை இந்த ரேடார் கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ளது.
குறிப்பாக, இந்தியாவின் ஏவுகணை சோதனை தளமான டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் தீவை கண்காணிக்கும் விதமாக இந்த ரேடார் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியா நடத்தும் ஏவுகணை சோதனை செயல்பாடுகளை சீனா கண்காணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.