
சின்னத்திரை நாயகி
மலை மஹாதேஷ்வரா எண்டர் பிரைசஸ் நிறுவனம் தயாரிக்கும், ஸ்வப்ன மண்டபா படத்துக்கு, சென்சார் போர்டு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. பரகூரு ராமசந்திரப்பா எழுதிய கதை, திரைப்படமாக உருவாகிறது. திரைக்கதை, வசனகர்த்தா மட்டுமின்றி, படத்தின் இயக்குனரும் இவரே. இதில் விஜய ராகவேந்திரா நாயகனாக நடித்துள்ளார். பாரம்பரிய இடங்களின் முக்கியத்துவம், இவற்றின் பாதுகாப்பு குறித்து விவரிக்கும் கதை கொண்டதாகும். படத்தில் ரஞ்சனி ராகவன் நாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாயகன், நாயகி என, இருவருமே இரட்டை வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரஞ்சனி ராகவன் பல சின்னத்திரை தொடர்களில் நடித்தவர்.
எகிறும் எதிர்பார்ப்பு
நடிகர் யஷ் நடிக்கும், டாக்சிக் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. எளிமையாக பூஜை செய்து படப்பிடிப்பை துவக்கியுள்ளனர். மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ், இந்த படத்தை இயக்குகிறார். பெங்களூரில் படப்பிடிப்பு நடக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹேமா குரேஷி என, பிரபல நட்சத்திரங்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவை சேர்ந்த அமெரிக்க நடிகர் அக்ஷய் ஓபராயும், டாக்சிக் படத்தில் நடிக்கிறாராம். பிரபல நட்சத்திரங்கள் நடிப்பதால், எதிர்பார்ப்பை துாண்டியுள்ளது. 2025 ஏப்ரல் 10ல், படத்தை வெளியிட ஏற்பாடு நடக்கிறது. இந்த படம் பல மொழிகளில் திரைக்கு வருகிறது.
நடிகராகிறார் ஜர்னலிஸ்ட்
பொறியாளர், வக்கீல், மென் பொறியாளர் என, வெவ்வேறு துறைகளை சார்ந்த பலர், சினிமா மோகத்தால் வேலைக்கு முழுக்குப் போட்டு, நடிக்க வருகின்றனர். சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளராக பணியாற்றிய ஹரிஷ் சீனப்பா, தற்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். கிரெடிட் குமாரா என்ற படத்தில் இவர் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கு முன்பு கேபிள் சேனலில் பணியாற்றும்போதே, நடிகராக வேண்டும் என, கனவு கண்டார். அந்த கனவு இப்போது நனவாகியுள்ளது. நடிப்பு பயிற்சிக்கும் செல்கிறார். இவருக்கு ஜோடியாக பாயல் நடித்துள்ளார். சமீபத்தில் பெங்களூரின் கண்டீரவா ஸ்டுடியோவில், பட பூஜை நடந்தது.
நாயகி எதிர்கொள்ளும் சவால்
சமீப நாட்களாக கன்னடத்தில், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் திரைக்கு வருகின்றன. இந்த வரிசையில் லைப் ஆப் மிருதுலா இணைந்துள்ளது. இதை தயாரிக்கும் மதன் குமார், நாயகனாகவும் நடித்துள்ளார். நாயகியாக பூஜா லோகாபுரா நடித்துள்ளார். நாயகி மிருதுலாவின் வாழ்க்கையில் மூன்று விதமான கட்டங்களை சந்திக்கிறார். எதிர்பாராமல் எதிர்கொள்ளும் சவால்களை இவர், எப்படி சமாளிக்கிறார் என்பதை, சுவாரஸ்யமாக கூறியுள்ளனர். படத்தில் பல திருப்பங்கள் உள்ளன. பெங்களூரு, குந்தாபுரா உட்பட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
பென் டிரைவின் பங்கு
'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று, அனைவரையும் கவர்ந்த நடிகை தனிஷா குப்பன்டா, தற்போது பென் டிரைவ் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் சண்டை காட்சிகளிலும் நடித்துள்ளார். படத்தின் கதைக்கும், கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய பென் டிரைவுக்கும், படத்தின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. படத்தில் பென் டிரைவ் முக்கிய கதாபாத்திரம் வகிக்கிறதாம். எனவே இதே பெயரை டைட்டிலாக வைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.
மாறுபட்ட கதாபாத்திரம்
நடிகர் வினய் ராஜ்குமார் நடிக்கும், பெபெ திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது. சமீபத்தில் பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. படத்துக்கு சென்சார் போர்டு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இதில் வினய் ராஜ்குமார் முரட்டுத்தனமான தோற்றத்தில் தென்படுகிறார். இதுவரை அவர் இத்தகைய கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை. கிராமத்தில் நடக்கும் கதையாகும். நாயகியாக காஜல் குந்தர் நடித்துள்ளார். மாறுபட்ட கதை, கதாபாத்திரம் என்பதால் படம் எப்போது திரைக்கு வரும் என, வினய் ராஜ்குமாரும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்.