
சஸ்பென்ஸ், திரில்லிங்
சங்கர் கோனமானஹள்ளி இயக்கத்தில், ராகினி திரிவேதி நாயகியாக நடிக்கும், பிங்கோ படத்தின் டப்பிங் பணி, சாது கோகிலாவுக்கு சொந்தமான ஸ்டுடியோவில் நடக்கிறது. சஸ்பென்ஸ், திரில்லிங் கதை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரில் நடந்தது. படத்தில் ராகினி, முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சண்டை காட்சிகளிலும் கலக்கி உள்ளார். படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. விரைவில் பாடல்கள், டீசர் வெளியாகும் என, படக்குழுவினர் கூறியுள்ளனர். இதன்பின் திரையில் பார்க்கலாம்.
நடிகர் பெயர் மாற்றம்
திரையுலகில் உள்ள சில நடிகர், நடிகையர் தங்களின் பெயரை மாற்றி, அதிர்ஷ்டமான பெயரை வைத்துக் கொள்வது வழக்கம். தற்போது மூத்த நடிகர் சசிகுமாரின் மகன் அக்ஷித், தன் பெயரை ஆதித்யா என, மாற்றிக்கொண்டார். இந்த பெயரில் இவர் நடிக்கும் முதல் திரைப்படம், காதாடி திரைக்கு வர தயாராகிறது. வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், தியாகிகள் ஆவர். சமுதாய நலனுக்காக எதையாவது செய்ய வேண்டும் என, விரும்புவர். இத்தகைய விஷயங்களை, மையமாக கொண்டு திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. புதிய பெயர் மாற்றம், ஆதித்யாவுக்கு அதிர்ஷ்டம் அளிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஸ்டைலிஷ் ஷில்பா
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவ்வப்போது கன்னட படங்களில் தலை காண்பிப்பார். தற்போது கேடி என்ற படத்தில் நடிக்கிறார். தன் பங்கு படப்பிடிப்பை முடித்து கொடுத்து, மும்பைக்கு பறந்து விட்டார். இவரது கதாபாத்திரத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு, மைசூரில் நடந்தது. இதில் சத்யவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் ஸ்டைலிஷாக தென்படுகிறார். இவரது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ஷில்பா நடிக்கும் மூன்றாவது கன்னட படமாகும். இப்படத்தில் பாலிவுட்டின் மற்றொரு ஸ்டார் நடிகர் சஞ்சய்தத், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கன்னடம், தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் திரைக்கு வருகிறது.
கிரிக்கெட் வீராங்கனை
பெண் கிரிக்கெட் வீராங்கனையை மையமாக வைத்து எடுக்கப்படும் சஹரா படப்பிடிப்பு இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. முதற்கட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. பெண் கிரிக்கெட் வீராங்கனையை மையமாக வைத்து, கன்னடத்தில் வெளியாகும் படம் இதுவாகும். மாண்டியாவை சேர்ந்த இளம்பெண் கிரிக்கெட்டில் சாதனை செய்வதே, கதையின் சாராம்சம். எட்டு ஆண்டுகளாக கன்னட திரையுலகில், உதவி இயக்குனராக பணியாற்றிய மஞ்சேஷ் பகவத், முதன் முறையாக இயக்குனராகி உள்ளார். கிரிக்கெட் வீராங்கனையாக சாரிகா நடித்துள்ளார்.
புரளியால் வருத்தம்
நடிகர் பிரஜ்வல் தேவராஜ் குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளனர். இவருக்கு அஞ்சலி செலுத்தும் போஸ்டர், சோஷியல் மீடியாக்களில் பரவியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அறிமுகம் உள்ளவர்கள் பிரஜ்வலுக்கு போன் செய்து விசாரிக்கின்றனர். இவர் நன்றாகத்தான் இருக்கிறார். இந்த போஸ்டர் இவர் நடிக்கும் வீரம் படத்தில் உள்ளது. விஷமிகள் போஸ்டரை தவறாக பயன்படுத்தி, அவர் இறந்துவிட்டதாக புரளி கிளப்பியுள்ளனர். இத்தகைய செயலை செய்தவர்கள் மீது, போலீசாரிடம் பிரஜ்வல் குடும்பத்தினர் புகார் அளித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. இவர் பல வெற்றி படங்களை கொடுத்த மூத்த நடிகர் தேவராஜ் மகன்.
நடிகையருக்கு வரவேற்பு
கன்னட நடிகையருக்கு, தெலுங்கு படவுலகில் அமோக வரவேற்பு உள்ளது. ராஷ்மிகா மந்தண்ணா, ஸ்ரீலீலா, ஹரிப்பிரியா உட்பட பல நடிகைகள் தெலுங்கு திரைவானில் ஜொலிக்கின்றனர். அந்த வரிசையில் நடிகை ஆஷிகா ரங்கநாத்தும் சேர்ந்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆர்., சகோதரர் கல்யாண் ராம் நாயகனாக நடித்த, அமிகோஸ் படத்தில் அறிமுகமாக ஆஷிகா, தற்போது அடுத்தடுத்த வாய்ப்புகளை பெறுகிறார். சிரஞ்சீவி நடிக்கும் விஸ்வம்பரா படத்தில், ஆஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கன்னடத்திலும் கூட இவருக்கு வாய்ப்பு குறையவில்லை. இரண்டு மொழிகளிலும் 'பிசி'யாக நடிக்கிறார்.