
ஓய்வுக்கு பின் 'சுறுசுறு'
கன்னடத்தில் அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தண்ணா, தற்போது கன்னடத்தை ஓரங்கட்டி, தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிசியாக நடிக்கிறார். இவர் எங்கிருக்கிறார் என கேட்டால், மும்பையிலோ அல்லது ஹைதராபாத்திலோ, ஷூட்டிங்கில் இருப்பார் என, பதில் வரும். ஆனால், சில நாட்களாக அவர், படப்பிடிப்பில் இருப்பதாக தெரியவில்லை.
இது குறித்து, அவரிடமே கேட்ட போது, ''நான் ஒரு மாதமாக படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை. எனக்கு சிறு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தேன். டாக்டர்கள் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வில் இருக்கிறேன். இப்போது குணம் அடைந்துள்ளேன். முன்பை விட அதிக உற்சாகத்துடன், பட வேலைகளில் ஈடுபடுவேன்,'' என்றார்.
மாறுபட்ட கதை
நடிகர்கள் ரமேஷ் அரவிந்த், கணேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படத்துக்கு ராம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. இது குறித்து, ரமேஷ் அரவிந்த் கூறுகையில், ''புஷ்பக விமானா, இன்ஸ்பெக்டர் விக்ரம் என பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த விக்யாத், ராம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
''தயாரிப்பாளர் விக்யாத் இயக்குனராவது மகிழ்ச்சி அளிக்கிறது. படம் மாறுபட்ட கதை கொண்டதாகும். மக்களை வேறு உலகத்துக்கு அழைத்து செல்லும். ஏற்கனவே பட துணுக்குகள், போஸ்டர் வெளியிடப்பட்டது, படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்,'' என்றார்.
விரைவில் சிம்ஹ ரூபிணி
பக்தியை மையமாக கொண்ட, சிம்ஹ ரூபிணி படத்தின் பாடல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. நடிகரும், இசை அமைப்பாளருமான சந்தன் ஷெட்டி, இந்த படத்தின் மா ருத்ரானி என்ற அம்மனை பற்றிய பாடலை வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தினார்.
படக்குழுவினர் கூறுகையில், 'கதை, திரைக்கதையை கின்னாள் ராஜ் எழுதி, இயக்கி உள்ளார். நடிகை யசஷ்வினி, மாரம்மா தேவியாக நடித்துள்ளார். நாங்கள் திட்டமிட்டபடியே, படப்பிடிப்பு முடிந்துள்ளது. படம் எப்போது திரைக்கு வரும் என்பதை விரைவில் கூறுகிறோம்' என்றனர்.
ராட்சச சக்தி
இளைஞனின் சாகச கதை கொண்ட, கதாதாரி ஹனுமான் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர், சமீபத்தில் வெளியானது. படத்தின் கதை குறித்து, ரோஹித் கொல்லியிடம் கேட்ட போது, 'பல யுகங்களில் வெவ்வேறு ராட்சசர்கள் சம்ஹாரம் செய்யப்பட்டனர். ஆனால் ராட்சச சக்தி, இப்போதும் உயிருடன் உள்ளது.
'இதை சாதாரண நபர் ஒடுக்கும் கதையாகும். சாகசம், ஹாரர், திரில்லர், காமெடி என அனைத்து அம்சங்களும் உள்ளன. ரவி நாயகனாகவும், புதுமுகம் ஹர்ஷிதா நாயகியாகவும் நடித்து உள்ளனர். இந்த படம் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராகிறது' என்றார்.
நாங்கள் காரணமல்ல
நடிகை பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ரேணுகாசாமி தவறு செய்துவிட்டார். இதற்கு தண்டனையாக நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பவித்ரா கவுடா மட்டுமின்றி, மேலும் சில நடிகையருக்கும் ரேணுகாசாமி ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக, நடிகை ராகினி திரிவேதி கூறுகையில், ''ரேணுகாசாமியிடம் இருந்து, எனக்கு எந்த ஆபாச மெசேஜ்களும் வரவில்லை. பொதுவாக செலிபிரிட்டிகளின் சமூக வலைதளங்களை, ஏஜென்சிகள் நிர்வகிக்கின்றன. வலைதளத்தில் வரும் மெசேஜ்கள் குறித்து, எங்களுக்கு தெரிவதில்லை. அனைத்துக்கும் எங்கள் பெயரை முடிச்சு போடுவது நகைப்புக்குரியது,'' என்றார்.
13 மொழிகளில் ரிலீஸ்
நடிகர் துருவா சர்ஜா, தன் படங்களுக்கு அதிகமாகவே மெனக்கெடுவார். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு படம் வெளியாகும். மூன்று ஆண்டுகளுக்கு பின், அவரது நடிப்பில் மார்ட்டின் அக்டோபர் 11ல் உலகம் முழுதும் திரையிடப்படுகிறது.
இது குறித்து, அவர் கூறுகையில், ''கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, ரஷ்யன், கொரியன் உட்பட 13 மொழிகளில் திரைக்கு வருகிறது. தற்போது டப்பிங் பணிகள் நடக்கின்றன. படத்தை மற்ற மொழிகளில் டப்பிங் செய்ய, ஏ.ஐ., தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.