சித்ரதுர்காவில் குளோரின் கசிவு நுாற்றுக்கணக்கானோர் 'அட்மிட்'
சித்ரதுர்காவில் குளோரின் கசிவு நுாற்றுக்கணக்கானோர் 'அட்மிட்'
ADDED : செப் 10, 2024 07:03 AM

சித்ரதுர்கா: ஹொசதுர்காவில், குடிநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்த காஸ் சிலிண்டரில் இருந்து குளோரின் காஸ் கசிவு ஏற்பட்டதால், நுாற்றுக்கணக்கானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
சித்ரதுர்கா மாவட்டம், ஹொசதுர்கா ஏ.பி.எம்.சி., மார்க்கெட் எதிரில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளது. இது டவுன்சபைக்கு சொந்தமானது.
குடிநீர் சுத்திகரிக்க பயன்படுத்தும் குளோரின் காஸ் நிரம்பிய சிலிண்டரில் இருந்து, நேற்று மாலை 6:00 மணிக்கு, கசிவு ஏற்பட்டது. இரவு 8:00 மணியளவில் ஒரு கி.மீ., துாரம் சுற்றளவில் காஸ் பரவியது.
இதனால், சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் நுாற்றுக்கணக்கான மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என்ன நடந்தது என்று தெரியாமல், வீட்டில் இருந்து மக்கள் வெளியே ஓடி வந்தனர். திறந்த வெளி பகுதிகளில் குவிந்தனர்.
தகவலறிந்த வந்த தீயணைப்பு துறை ஊழியர்கள், கசிவு ஏற்பட்ட சிலிண்டரை அடைக்க முயற்சித்தனர். அவர்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இறுதியில் நிலத்தில் குழி தோண்டி, சிலிண்டர் புதைக்கப்பட்டது.
இதற்கிடையில், நுாற்றுக்கணக்கான மக்கள், ஹொசதுர்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலர், சித்ரதுர்கா மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் சென்றனர். தகவலறிந்த சுகாதார துறை, அனைத்து மருத்துவர்களையும் உடனடியாக பணிக்கு திரும்பும்படி உத்தரவிட்டது.
இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சுற்ற வட்டார கிராமங்களில் உள்ள மக்கள், வேறு இடங்களுக்கு சென்றனர். ஹொசதுர்கா தாசில்தார் திருப்பதி பாட்டீல், இன்ஸ்பெக்டர் திம்மண்ணாவிசாரிக்கின்றனர்.