சொத்துக்கு வரி செலுத்த 'சாய்ஸ்' திருத்த சட்டம் நிறைவேறியது
சொத்துக்கு வரி செலுத்த 'சாய்ஸ்' திருத்த சட்டம் நிறைவேறியது
ADDED : ஆக 08, 2024 01:27 AM
புதுடில்லி:நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான நிதி மசோதா, நேற்று லோக் சபாவில் நிறைவேறியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
இதன்படி, கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி வரை சொத்துகளை விற்பனை செய்தவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும்.
இவர்கள், சொத்து விற்பனை வாயிலாக கிடைத்த லாபத்திற்கு நீண்டகால ஆதாய வரி விகிதத்தை கணக்கிட, இண்டெக்சேஷன் முறையை தேர்வு செய்யாமல், 12.50 சதவீதம் வரி செலுத்தலாம், அல்லது இண்டெக்சேஷன் முறையை தேர்வு செய்தால், மூலதன ஆதாய வரியாக 20 சதவீதம் செலுத்தலாம். இரண்டில் ஏதேனும் ஒரு முறையில் வரி செலுத்த வாய்ப்பு வழங்கப்படும்.
கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், இண்டெக்சேஷன் பயன் நீக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததால் மசோதாவை மாற்றியமைத்து நேற்று தாக்கல் செய்த நிதியமைச்சர், ''இந்த புதிய திருத்தம் கூடுதல் வரி சுமை எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. மக்களின் கோரிக்கைக்கு செவிமடுத்துள்ளோம்,'' என தெரிவித்துள்ளார்.