ADDED : மே 07, 2024 12:42 AM

புதுடில்லி, சி.ஐ.எஸ்.சி.இ., எனப்படும், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நடத்திய பொதுத்தேர்வுகள் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மாணவர்களை விட மாணவியரே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுதும், சி.ஐ.எஸ்.சி.இ., பாடத்திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த பிப்., முதல் மார்ச் வரை நடந்தன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 2,695 பள்ளிகளைச் சேர்ந்த 2.43 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வை, 1,366 பள்ளிகளைச் சேர்ந்த 99,901 மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில் சி.ஐ.எஸ்.சி.இ., 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மாணவர்களை விட மாணவியரே அதிக தேர்ச்சி பெற்றனர். மாணவர்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியைத் தவிர்க்க இந்த ஆண்டு முதல் தகுதிப் பட்டியல் வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டது.
தேர்வு முடிவுகள் குறித்து, சி.ஐ.எஸ்.சி.இ., தலைமை நிர்வாகி மற்றும் செயலர் ஜோசப் இமானுவேல் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் 99.47 ஆகவும், பிளஸ் 2 வகுப்புக்கு 98.19 சதவீதமாகவும் உள்ளது. இது கடந்த ஆண்டு முறையே 98.94 சதவீதம் மற்றும் 96.93 சதவீதமாக இருந்தது.
பத்தாம் வகுப்பில் ஆண்களின் தேர்ச்சி விகிதம் 99.31 சதவீதமாகவும், மாணவியரின் தேர்ச்சி விகிதம் 99.65 சதவீதமாகவும் உள்ளது. அதே போல், பிளஸ் 2வில், 97.53 சதவீத மாணவர்களும், 98.92 சதவீத மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.