எஸ்.ஐ., பரசுராம் மரணம் தொடர்பாக சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., விசாரணை
எஸ்.ஐ., பரசுராம் மரணம் தொடர்பாக சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., விசாரணை
ADDED : ஆக 17, 2024 11:03 PM
யாத்கிர்: எஸ்.ஐ., பரசுராம் மரணம் தொடர்பாக, யாத்கிரில் சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., பி.கே.சிங் நேற்று விசாரணை நடத்தினார்.
யாத்கிர் சைபர் கிரைம் எஸ்.ஐ., பரசுராம், 34. கடந்த 2ம் தேதி யாத்கிர் எஸ்.பி., அலுவலகத்திற்கு பின்பக்கம் உள்ள, போலீஸ் குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
யாத்கிர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னூர்; அவரது மகன் பாம்பண்ண கவுடா, 30 லட்சம் ரூபாய் கேட்டு நெருக்கடி கொடுத்ததுடன், ஜாதியை சொல்லி திட்டியதால் மன உளைச்சலில், பரசுராம் இறந்ததாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
பரசுராம் மரணம் குறித்து சி.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்டது. எம்.எல்.ஏ., அவரது மகன் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவானது. அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு, யாத்கிர் சி.ஐ.டி., டி.எஸ்.பி., புனித் தலைமையில், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சோதனை நடந்தது. பரசுராம் இறந்து கிடந்த வீட்டிலிருந்து, எம்.எல்.ஏ., சிபாரிசு கடிதத்தின் நகலும் சிக்கியது.
இந்நிலையில் பரசுராம் மரணம் குறித்து விசாரணை நடத்த, சி.ஐ.டி., கூடுதல் டி.ஜி.பி., பி.கே.சிங் நேற்று யாத்கிர் வந்தார்.
யாத்கிர் டவுன், சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று, அங்கு பணியாற்றும் போலீசாரிடம் விசாரணை நடத்தி தகவல் பெற்றுக்கொண்டார். பரசுராம் இறந்து கிடந்த வீட்டிற்கும் சென்று ஆய்வுசெய்தார்.