இந்தியா வெற்றியை கொண்டாடியதால் மோதல்... வாகனங்களுக்கு தீ வைப்பு
இந்தியா வெற்றியை கொண்டாடியதால் மோதல்... வாகனங்களுக்கு தீ வைப்பு
ADDED : மார் 10, 2025 08:57 AM

போபால்: மத்திய பிரதேசத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடியதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் மோவ் பகுதியில் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மோவ்வில் உள்ள ஜம்மா மசூதி அருகே சிலர் பேரணியாக சென்றனர். அப்போது, அவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
ஏராளமான வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இரு வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார், சம்பவ இடத்திற்கு குவிந்தனர். அதேபோல, ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இது குறித்து இந்தூர் புறநகர் எஸ்.பி., ஹத்திகா வாசல் கூறுகையில், 'இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசுகளை வெடித்ததால், இந்தக் கலவரம் வெடித்துள்ளது. தற்போது, நிலைமை கட்டுக்குள் உள்ளது. நாம் போலியான செய்திகளை நம்ப மாட்டேன். தொடர்ந்து, இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.