கேரளாவில் பள்ளி மாணவர்கள் மோதல்; 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
கேரளாவில் பள்ளி மாணவர்கள் மோதல்; 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
ADDED : மார் 01, 2025 12:53 PM

கோழிக்கோடு: கேரளாவில் தனியார் டியூசனில் படிக்கும் இரு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.
தாமரசேரியில் தனியார் டியூசனில் படிக்கும் மாணவர்கள் பிரிவு உபசரிப்பு விழாவை நடத்துவது தொடர்பாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் 16 வயது மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கோழிக்கோடு அரசு மருத்துவமனை ஐ.சி.யு.,வில் மாணவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். நேற்று பிப்.,28 நள்ளிரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 மாணவர்களை கைது செய்து, சிறுவர்களுக்கான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனிடையே, கோழிக்கோடு கல்வித்துறையின் இணை இயக்குநர் இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை சமர்பித்தார்.
கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், 'மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவன் உயிரிழந்துள்ளான். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.' எனக் கூறினார்.