ADDED : செப் 10, 2024 11:06 PM
பேடரஹள்ளி: தாய்லாந்தில் இருந்து ஹைட்ரோ கஞ்சா கொண்டு வந்து, பெங்களூரில் விற்பனை செய்த துணி வியாபாரி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு, பேடரஹள்ளி அருகே ஆந்திரஹள்ளியில் உள்ள தனியார் கல்லுாரியின் பின்பக்கம், நேற்று முன்தினம் இரவு ஒருவர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார்.
இதுபற்றி பேடரஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், கஞ்சா விற்ற நபரை கைது செய்தனர். அவர் வைத்திருந்த கஞ்சாவை ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட 'ஹைட்ரோ' கஞ்சா என்பது தெரிந்தது.
இதையடுத்து, அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு 2 கிலோ 779 கிராம் ஹைட்ரோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1.22 கோடி ரூபாய்.
விசாரணையில் கைதானவர் பெயர் தவுனேஷ், 35, என்பதும், துணிக்கடை நடத்தியதும் தெரிய வந்தது. கடந்த ஆண்டு கேரளாவை சேர்ந்த சைஜு என்பவருடன், தவுனேஷுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
கஞ்சா விற்பனையில் ஈடுபடும் சைஜு, தவுனேஷிடம் கஞ்சா விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டார். தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம், ஹைட்ரோ கஞ்சாவை கடத்தி வந்து தவுனேஷுடம், சைஜு கொடுத்ததும் தெரிந்தது. சைஜுவை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வழக்கமான கஞ்சா செடிகள், மண்ணில் வளர்க்கப்படும். ஆனால், ஹைட்ரோ கஞ்சா செடிகள், கட்டடத்துக்குள் சில திரவங்கள் அடங்கிய தொட்டியில் வைத்து வளர்க்கப்படும்.
இதனால், வேகமான, விரைவான பெரிய இலைகள் மற்றும் மொட்டுகள் கிடைக்கும். இதில், போதையும் அதிகம் இருக்கும் என்பதால், இதற்கு எப்போதும் கிராக்கி அதிகம்.