முதல்வர் கனவு காண வேண்டாம்: தேஷ் பாண்டேவுக்கு எச்சரிக்கை
முதல்வர் கனவு காண வேண்டாம்: தேஷ் பாண்டேவுக்கு எச்சரிக்கை
ADDED : செப் 02, 2024 09:09 PM

பெங்களூரு : ''முதல்வர் ஆவோம் என பகல் கனவு காண வேண்டாம்,'' என, தேஷ் பாண்டேவுக்கு கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'அமைச்சராக இருந்து இருந்து எனக்கு போர் அடித்துவிட்டது. இனி முதல்வர் பதவி வேண்டும்' என, காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், மூத்த எம்.எல்.ஏ.,வுமான தேஷ்பாண்டே நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து, அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா தற்போது சக்தி வாய்ந்தவராக உள்ளார். தேஷ் பாண்டேவிடம் பேசினேன். நிருபரின் கேள்விக்கு, 'நான் மூத்தவன், நான் ஏன் முதல்வராக கூடாது?' என்று பதிலளித்துள்ளார். அத்துடன் அதை விட்டு விட வேண்டும்; முதல்வராவோம் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம்.
'மூடா' வழக்கில் உயர் நீதிமன்றத்தில் முதல்வருக்கு பின்னடைவு ஏற்படாது. மூடா முறைகேட்டில் அவர் ஈடுபடவில்லை. அதில் இருந்து விடுவிக்கப்படுவார்.
அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, அமைச்சர் பரமேஸ்வரை சந்தித்து பேசியதில் என்ன தவறு இருக்கிறது? இரண்டு மாதங்களுக்கு முன்பு, என் வீட்டுக்கு பரமேஸ்வர் வந்திருந்தார். நேற்று அவரின் வீட்டுக்கு நான் சென்றிருந்தேன். ஒரே கட்சியினர் சந்தித்து பேசிக்கூடாதா? கட்சி வளர்ச்சி தொடர்பாக பேசி உள்ளனர்.
கொரோனா காலத்தில் நடந்த முறைகேட்டில், அப்போதைய அமைச்சர் சுதாகருக்கு தொடர்பு உள்ளது. அறிக்கையை நான் பார்க்கவில்லை. ஆனால், அப்போது அமைச்சராக இருந்தவர் இதற்கு பொறுப்பாவார்.
கடந்த பா.ஜ., ஆட்சியில் போவி ஆணையம், அம்பேத்கர் ஆணையம், டிரக் டெர்மினல் என பல ஊழல்கள் நடந்துள்ளன. அமைச்சரவை ஒப்புதல் பெறாமல், பல ஊழல்கள் நடந்துள்ளன.
கொரோனா காலத்தில் அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும். மக்கள் வாழ்விலும், மரணத்திலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
கவர்னர் சுதந்திரமாக செயல்படாமல், மத்திய அரசின் பொம்மை போன்று செயல்படுகிறார். கவர்னர் மாளிகை, பா.ஜ., அலுவலகம் போன்று செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.