சமூக வலைதளங்களை நிர்வகிக்க மாதம் ரூ.53 லட்சம் செலவிடும் முதல்வர்
சமூக வலைதளங்களை நிர்வகிக்க மாதம் ரூ.53 லட்சம் செலவிடும் முதல்வர்
UPDATED : செப் 02, 2024 10:22 PM
ADDED : செப் 02, 2024 10:18 PM

பெங்களூரு, சமூக வலைதளங்களை நிர்வகிப்பதற்கு, கர்நாடக முதல்வர் அலுவலகம், மாதந்தோறும் 53 லட்சம் ரூபாய் செலவு செய்வதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, 'பேஸ்புக், எக்ஸ், வாட்ஸாப் சேனல்'களை பயன்படுத்துகிறார்.
முதல்வர் பங்கேற்கும் அன்றாட நிகழ்ச்சிகள், அவரது அறிக்கைகள், பதிவுகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவவேற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக, மாதந்தோறும் முதல்வர் அலுவலகம், எவ்வளவு செலவு செய்கிறது என்பதை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் மாரலிங்கையா கவுடா மாலி பாட்டீல் கேட்டிருந்தார்.
இதற்கு, முதல்வர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.
இதன்படி, 2023 அக்டோபர் 25 முதல், 2024 மார்ச் 31ம் தேதி வரை, சமூக வலைதளங்கள் நிர்வகிப்புக்காக, முதல்வர் அலுவலகம் 3 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஜி.எஸ்.டி., 18 சதவீதத்துடன் சேர்த்து, மாதந்தோறும் சராசரியாக 53.9 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுவதாக முதல்வர் அலுவலகம் பதில் அளித்துள்ளது.
'நிதி பற்றாக்குறையால் அவதிப்படும் கர்நாடக அரசு, வளர்ச்சி பணிகள் செய்ய முடியாமல் தவிக்கிறது.
'இத்தகைய சூழ்நிலையில், இவ்வளவு நிதியை, சமூக வலைதளங்கள் நிர்வகிப்புக்கு பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?' என்று சமூக ஆர்வலர் மாரலிங்கையா கவுடா மாலி பாட்டீல் அரசுக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள முதல்வர் அலுவலகம், 'இதற்கு முன்பிருந்த பா.ஜ., முதல்வர், சமூக வலைதளங்கள் நிர்வகிப்புக்காக, மாதந்தோறும் 2 கோடி ரூபாய் செலவு செய்து வந்தார்.
'அதை ஒப்பிடுகையில், தற்போது குறைவாகதான் செலவு செய்யப்படுகிறது' என்று கூறியுள்ளது.