ADDED : ஏப் 01, 2024 11:43 PM
கோலார் : லோக்சபா தேர்தல் நெருங்குவதால், போலீசார் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். அந்தந்த மாவட்டங்களின் எல்லைப் பகுதியில், தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு பஸ்கள் உட்பட, அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்துகின்றனர்.
இதுவரை மாநிலத்தின் பல்வேறு இடங்களில், கோடிக்கணக்கான ரூபாய் பிடிபட்டது. கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி பொருட்கள், பரிசு பொருட்களும் கூட கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வகையில் முதல்வரின் வாகனத்தையும், தேர்தல் அதிகாரிகள் விட்டு வைக்கவில்லை.
முதல்வர் சித்தராமையா, நேற்று முன் தினம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, கோலாருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கோலார் எல்லையில் உள்ள ராமசந்திரா அருகில் சென்றபோது, சோதனைச்சாவடியில் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா தலைமையிலான தேர்தல் அதிகாரிகள், முதல்வரின் காரை தடுத்து நிறுத்தினர். சோதனை நடத்திய பின் அனுப்பி வைத்தனர்.
தேர்தல் அதிகாரிகள், தங்கள் பணியை செய்ய முதல்வர் ஒத்துழைப்பு கொடுத்தார்.
