ADDED : ஏப் 27, 2024 11:04 PM

கல்யாண கர்நாடகாவின் நுழைவு வாயில் கலபுரகி மற்றும் பீதர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருந்தவர்களுக்கு, கர்நாடக முதல்வராகும் யோகம் கிடைத்தது.
கர்நாடகாவில் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட ஓட்டுப் பதிவு, நல்ல முறையில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்கு, அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தயாராகின்றனர்.
பா.ஜ.,வுக்காக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் என, பல முக்கிய தலைவர்கள்; காங்கிரஸ் சார்பில் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட, பல தலைவர்கள் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.
இரண்டாம் கட்டத்தில் ஓட்டுப்பதிவு நடக்கும் தொகுதிகளில், கலபுரகி, பீதரும் அடங்கியுள்ளன. இவ்விரு லோக்சபா தொகுதிகளின் எம்.பி.,யாக இருந்தவர்களுக்கு, முதல்வராகும் யோகம் தேடி வந்தது.
கலபுரகி தொகுதியில் 1984ல் வெற்றி பெற்று எம்.பி.,யான வீரேந்திர பாட்டீல், முதல்வராகவும் பதவி வகித்தார்.
இத்தொகுதியில், 1980ல் வெற்றி பெற்ற தரம்சிங்குக்கு, முதல்வராக வாய்ப்பு கிடைத்தது. லோக்சபா எம்.பி.,யாக இருந்தவர்கள், அதன்பின் சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றனர். கலபுரகி ஆரம்பத்தில் இருந்தே, அரசியல் பரபரப்பு மிகுந்த தொகுதியாகும். காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள், கலபுரகி எம்.பி.,யாக இருந்துள்ளனர்.
இதற்கு முன்பு, இந்திராவுக்கு நெருக்கமான ஸ்டீபன், மத்தியில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். வீரேந்திர பாட்டீல் மத்திய நிலக்கரி, பெட்ரோலியம் துறை அமைச்சராக இருந்தார்.
தரம்சிங் பல்வேறு சட்டசபை கமிட்டிகளின் உறுப்பினராக இருந்தார். மல்லிகார்ஜுன கார்கே, மத்திய தொழிலாளர் நலத்துறை, ரயில்வேத்துறை போன்ற முக்கிய துறைகளை நிர்வகித்தவர். கலபுரகி அரசியல் சக்தியாக வளர்ந்தது.
கலபுரகி எம்.பி.,யாக இருந்த வீரேந்திர பாட்டீலுக்கு, இரண்டு முறை முதல்வராகும் யோகம் தேடி வந்தது. 1968 மே 29 முதல், 1971 மார்ச் வரை, அன்றைய மைசூரு மாநில முதல்வராக இருந்தார். 1989 நவம்பர் 30 முதல், 1990 அக்டோபர் 10 வரை, கர்நாடக முதல்வராக பதவி வகித்தார்.
கடந்த 2004 மே 28ல், கர்நாடக முதல்வராக பதவியேற்ற தரம்சிங், 2006 ஜனவரி 28 வரை, பதவியில் இருந்தார். வீரேந்திர பாட்டீல், தரம்சிங் இருவருக்கும் ஒரே ஒற்றுமை என்றால், மக்களுடன் கலந்து பழகுவர். வீரேந்திர பாட்டீல் கறாரான குணம் உள்ளவர். ஆனால் தரம்சிங் மென்மையான குணம் கொண்டவர்.
- நமது நிருபர் -

