வறட்சி பகுதியில் பாக்கு தோட்டம் இயற்கை விவசாயம் மூலம் அசத்தும் ஏட்டு
வறட்சி பகுதியில் பாக்கு தோட்டம் இயற்கை விவசாயம் மூலம் அசத்தும் ஏட்டு
ADDED : ஆக 25, 2024 08:30 AM

முன்பு ஒரு காலத்தில், விவசாயம் செய்வது, பெருமையாக கருதப்பட்டது. தற்போது விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு, திருமணம் செய்து கொள்ள மணமகள் கிடைப்பது அரிதாகிவிட்டது. விவசாயம் செய்வதை சிலர் விரும்புவதில்லை.
பலரும் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு சென்று வர வேண்டும்.
மாதந்தோறும் கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மழையின்மை, நிலத்தடி நீர்மட்டம் குறைதல், லாபத்தை விட நஷ்டமே அதிகம் என பல்வேறு காரணங்களால், விவசாயத்தின் மீது ஆர்வம் குறைவதால், வேறு தொழிலுக்கு மாறி வருவதை காண்கின்றோம்.
கிணறு, ஆழ்துளைக்கிணறு, கால்நடைகள், டிராக்டர் என விவசாயம் செய்வதற்கு போதிய வசதி இருப்போருக்கும் விவசாயத்தின் மீது ஆர்வம் குறைந்து வருகிறது.
முன் மாதிரி விவசாயி
ஆனால், விஜயபுரா மாவட்டம், கோல்ஹார் தாலுகா, கரசங்கி கிராமத்தை சேர்ந்த கங்கலா, என்ற விவசாயி, வறண்ட நிலத்தில், பாக்கு தோட்டத்தை அமைத்து அசத்தி வருகின்றார்.
பொதுவாக மலைப்பிரதேசங்களில் தான் பாக்கு மரங்கள் வளரும். இவரோ தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதியில் வளர்த்து முன் மாதிரி விவசாயியாக திகழ்கிறார். போலீஸ் ஏட்டாக இருக்கும் கங்கலா, விவசாயி என்று சொல்லி கொள்வதில் பெருமைப்படுகிறார்.
இவருக்கு சொந்தமாக, 22 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 4 ஏக்கர் நிலத்தில் 2,000 பாக்கு மரங்களை நட்டுள்ளார். இத்துடன், மா, பலா, சீத்தாப்பழம் என வெவ்வேறு விதமான பழ மரங்களும் நட்டு பராமரிக்கின்றார். மீதியுள்ள 18 ஏக்கர் நிலத்தில், கரும்பு, மக்காச்சோளம் விளைவிக்கின்றார்.
ரூ.11 லட்சம் வருமானம்
விஜயபுராவில் அதிக வெயில் அடிக்கும். இருந்தாலும், இவர் நட்டுள்ள பாக்கு மரங்கள் நல்ல விளைச்சல் தருகின்றன. ஆண்டுக்கு, ஒரு ஏக்கருக்கு 400 முதல் 500 கிலோ பாக்கு அறுவடை செய்கின்றார்.
உள்ளூர் சந்தையில் விற்பனை குறைவு என்பதால், சென்னகிரி சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. 100 கிலோ எடை கொண்ட பாக்கு மூட்டை 53,000 முதல் 55,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, 10 லட்சம் முதல் 11 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
கங்கலா கூறியதாது:
பாக்கு மரக்கன்றுகள் நடும் போது ஒரு கன்றுக்கும், மற்றொரு கன்றுக்கும் இடையே 9 அடி இடைவெளி விட்டால், ஒரு ஏக்கரில் 500 கன்றுகளை நடலாம்.
சொட்டு நீர்ப்பாசனம்
ஒவ்வொரு மரக்கன்றுக்கும் இயற்கை உரம் போட வேண்டும். அவ்வப்போது, களைகளை அகற்ற வேண்டும். குறைந்த அளவு தண்ணீர் பயன்படுத்தும் வகையில், சொட்டு நீர்ப்பாசனத்தை பயன்படுத்த வேண்டும்.
இயற்கை உரம் மூலம், பாக்கு மரங்களை வளர்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். இயற்கை உரம் பயன்படுத்துவதால், மண்ணும் பலம் பெரும். நிலத்தில் 4 போர்வெல்கள், 2 கிணறுகள் உள்ளன.
கால்வாய்களை வெட்டி, குழாய்கள் வாயிலாக சொட்டு நீர்ப்பாசனம் முறையில், மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதனால், வெயில் காலத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -