ADDED : ஜூலை 04, 2024 02:43 AM

அம்ருதஹள்ளி: போதையில் வந்ததால் கல்லுாரிக்குள் அனுமதிக்காத மேலாளரை கத்தியால் குத்தி கொன்ற மாணவர் கைது செய்யப்பட்டுஉள்ளார்.
பெங்களூரு, அம்ருதஹள்ளியில் சிந்தி என்ற பெயரில் தனியார் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
இங்கு துாய்மை பணியாளர்கள் பிரிவின் மேலாளராக இருந்தவர் ஜெய் கிஷோர் ராய், 47.
இந்நிலையில், நேற்று கல்லுாரி காவலாளிகள் பிரிவின் மேலாளர் பணிக்கு வரவில்லை. இதனால், ஜெய் கிஷோர் ராய்க்கு, காவலாளிகள் பிரிவு மேலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.நேற்று மதியம் கல்லுாரியின் நுழைவுவாயில் கேட்டில், ஜெய் கிஷோர் ராய் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவர் பார்கவ், 22 குடிபோதையில் இருந்தார்.இதனால், அவரை கல்லுாரிக்குள் அனுமதிக்க ஜெய் கிஷோர் மறுத்தார். அவரிடம், பார்கவ் வாக்குவாதம் செய்தார். பின் அங்கிருந்து சென்றவர் கடைக்கு சென்று கத்தி வாங்கி வந்து, ஜெய் கிஷோர் ராயின் நெஞ்சில் குத்தினார்.
பலத்த கத்தி குத்து காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அம்ருதஹள்ளி போலீசார், பார்கவை கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.