ADDED : மே 13, 2024 06:22 AM
ஆனேக்கல்: பொறியியல் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்ததால், தந்தைக்கு பயந்து கல்லுாரி மாணவர், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பீஹாரை சேர்ந்தவர்கள் ஹேமலதா - விஜய் சங்கர் தம்பதி. சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு ஆனேக்கல்லில் உள்ள ஜிகனியில் குடியேறினர்.
இவர்களின் மகன் அம்ரிதேஷ் பாண்டே, 21. மைசூரு சாலையில் உள்ள ஆர்.வி., கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு பொறியில் படித்து வந்தார். அருகில் உள்ள விடுதியில் தங்கி கல்லுாரிக்கு சென்று வருகிறார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கல்லுாரிக்கு வராமல், படிப்பில் கவனம் செலுத்தாததால், சமீபத்தில் நடந்த தேர்வில் இரண்டு பாடத்தில் தோல்வி அடைந்தார்.
சமீபத்தில் லோக்சபா தேர்தலில் ஓட்டு போடுவதற்காக அம்ரிதேஷ், ஜிகனிக்கு வந்தார்.
சில நாட்கள் பெற்றோருடன் இருந்த அவர், தான் தேர்வில் தோல்வியடைந்தது தந்தைக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சத்துடனே இருந்தார். அதனால் கல்லுாரிக்கு செல்வதாக கூறி, மே 10 ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டார்.
அன்று மகனுக்கு தந்தை விஜய் சங்கர் போன் செய்துள்ளார். சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. பலமுறை தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை. அவரது நண்பர்களுக்கு தொடர்பு கொண்டபோதும், அவர்களும் தெரியவில்லை என்று கூறி உள்ளனர்.
பதற்றமடைந்த பெற்றோர், பல இடங்களிலும் அவரை தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை ஆனேக்கல் ஏரியில் அவரது உடல் மிதந்தது.
தகவல் அறிந்த ஜிகனி போலீசார், உடலை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், தேர்வில் தோல்வியடைந்தது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்ற அச்சத்தில், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.