ADDED : ஜூலை 02, 2024 06:34 AM

பெங்களூரு: சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மகன் பிரஜ்வலை பார்க்க, பவானி ரேவண்ணா நேற்று சிறைக்கு வந்தார். ஊடகத்தினரிடம் முகத்தை காண்பிக்காமல், மறைத்துக் கொண்டார்.
லோக்சபா தேர்தல் நேரத்தில், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியானது. பல பெண்களை பிரஜ்வல் பலாத்காரம் செய்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல திருப்புமுனைகளுக்குப் பின், வெளிநாட்டில் இருந்து பெங்களூரு திரும்பிய அவரை எஸ்.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். தற்போது பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் சாட்சிகளை கலைக்கும் நோக்கில், பணிப்பெண்ணை கடத்திய குற்றச்சாட்டில் ரேவண்ணா கைதானார். பின் ஜாமினில் வெளியே வந்தார். இவரது மனைவி பவானி, தலைமறைவாக இருந்து, முன் ஜாமின் பெற்று, விசாரணைக்கு ஆஜரானார்.
இதற்கிடையில் சூரஜ் ரேவண்ணா மீது கட்சியின் ஆண் தொண்டர் பாலியல் புகார் கூறினார். இந்த வழக்கில் கைதாகி, போலீஸ் கஸ்டடி விசாரணையில் உள்ளார்.
இந்நிலையில், தன் மகன் பிரஜ்வலை பார்க்க நேற்று மதியம், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு பவானி வந்தார். சமீபத்தில் அவரது காலில் அடிபட்டதால், கைத்தடி ஊன்றி நடந்து வந்தார்.
சிறைக்குள் சென்றபோதும், மகனை பார்த்துவிட்டு வெளியே வந்தபோதும், ஊடகத்தினர் அவரை மொய்த்துக் கொண்டனர்.
ஆனால் பவானி, தன் முகத்தை மறைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.