ஏப்ரல் 2 ல் வருகிறார் அமித் ஷா 9 தொகுதிகள் மீது சிறப்பு கவனம்
ஏப்ரல் 2 ல் வருகிறார் அமித் ஷா 9 தொகுதிகள் மீது சிறப்பு கவனம்
ADDED : மார் 31, 2024 05:04 AM

பெங்களூரு, : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகாவில் ஏப்ரல் 2ம் தேதி முதல் பிரசாரம் துவக்குகிறார். அன்றைய தினம், ஒரே நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கர்நாடகாவில், லோக்சபா தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கின்றன. முதல் கட்டமாக நடக்கின்ற 14 தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இம்மாதம் 28ம் தேதி துவங்கியது.
ஆனாலும், பெரிய அளவில் பிரசாரம் நடக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி; காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலா இரண்டு இடங்களில் பிரசாரம் மேற் கொண்டனர்.
மற்றபடி தேசிய தலைவர்கள் யாரும் பிரசார களத்தில் இல்லை. இதனால் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் மந்தமாகவே இருக்கிறது.
இந்நிலையில், மாநில பா.ஜ., பொதுச் செயலர் சுனில்குமார், பெங்களூரில் நேற்று கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏப்ரல் 2ம் தேதி கர்நாடகாவில் பிரசாரத்தை துவக்குகிறார். அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டு ஆலோசனை நடத்துகிறார்.
காலை 11:00 மணிக்கு, பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடக்கின்ற பெங்., வடக்கு, பெங்., சென்ட்ரல், பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், பெங்., ரூரல் ஆகிய ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட பா.ஜ., சக்தி மையங்களின் பிரமுகர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
இதில், முக்கியமான 5,000 பிரமுகர்கள் பங்கேற்பர்.
மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை சிக்கபல்லாபூர், துமகூரு, தாவணகெரே, சித்ரதுர்கா ஆகிய நான்கு தொகுதிகள் தொடர்பாக தனித் தனியாக முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துவார்.
மாலை 6:00 மணிக்கு, பெங்., ரூரல் பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத்துக்கு ஆதரவாக, சென்னப்பட்டணாவில் 'ரோடு ஷோ' நடத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து மீண்டும் பிரசாரத்துக்கு வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

