தசராவுக்கு வருவோரை விருந்தாளிகள் போன்று உபசரிக்க கமிட்டி அறிவுரை
தசராவுக்கு வருவோரை விருந்தாளிகள் போன்று உபசரிக்க கமிட்டி அறிவுரை
ADDED : ஆக 23, 2024 06:17 AM

மைசூரு: 'தசரா விழாவிற்கு வரும் சுற்றுலா பயணியரை விருந்தாளிகள் போன்று உபசரிக்க வேண்டும். நம் வீட்டுக்கு வரும் உறவினர்கள் போன்று விருந்தோம்பல் செய்து, நன்றாக கவனித்து கொள்ள வேண்டும்' என, ஹோட்டல் உரிமையாளர்களுக்கு, தசரா விழா கமிட்டியினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மைசூரு தசரா விழாவிற்கான தேவையான ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் இப்போதே ஆரம்பித்து விட்டது. விழா நடக்கும் 10 நாட்கள் மட்டுமின்றி, விழாவுக்கு முன்னும், பின்னும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணியர் மைசூருக்கு வருவர்.
அப்படி வரும் சுற்றுலா பயணியரை நன்றாக கவனித்து கொள்ள வேண்டியதும், பாதுகாப்பு அளிப்பதும் அரசின் பொறுப்பு. மைசூரு மாவட்ட நிர்வாகத்துக்கு, சுற்றுலா மூலம் தான் அதிகபட்ச வருமானம் வருகிறது.
இந்நிலையில், தசரா விழாவின் வரவேற்பு பிரிவு துணை கமிட்டி தலைவர் சிவராஜு, ஹோட்டல் உரிமையாளர்களுடன் மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தசரா விழா என்பது, கர்நாடகாவில் பாரம்பரியமிக்க பெருமையை பேசும் திருவிழா. இந்த விழாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு மூலைகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருவர். அவர்களை விருந்தாளிகள் போன்று உபசரிக்க வேண்டும்.
எந்தவிதமான குளறுபடியும் இன்றி அனைத்து வசதிகளும் செய்ய வேண்டும். நம் வீட்டுக்கு வரும் உறவினர்கள் போன்று 'விருந்தோம்பல்' செய்து, நன்றாக கவனித்து கொள்ள வேண்டும்.
அனைத்து ஹோட்டல் அறைகளையும் சுத்தமாக நிர்வகிக்க வேண்டும். தசரா விழாவை வெற்றி பெற செய்ய ஹோட்டல் உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.