ADDED : ஜூன் 27, 2024 11:01 PM

பல்லாரி: பல்லாரியின் சண்டூர் தொகுதி இடைத்தேர்தலில், பா.ஜ., மற்றும் காங்கிரசில் சீட்டுக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. பா.ஜ.,வில் ஸ்ரீராமுலு, காங்கிரசில் எம்.பி., துக்காராம் குடும்பத்தினர் சீட் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மூன்று சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. காங்கிரஸ், பா.ஜ.,வில் சீட்டுக்கு முட்டி மோதுகின்றனர்.
இம்முறை லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் குமாரசாமி வெற்றி பெற்றதால் சென்னப்பட்டணா; ஹாவேரியில் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றதால் ஷிகாவி; பல்லாரியில் துக்காராம் வெற்றி பெற்றதால், சண்டூர் சட்டசபை தொகுதியும் காலியாக உள்ளன. மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
சண்டூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த துக்காராமுக்கு, தேசிய அரசியலுக்கு செல்வதில் விருப்பம் இல்லை. ஆனால் வேட்பாளர் இல்லாததால், இவரை காங்கிரஸ் பலவந்தமாக களமிறக்கியது. அவர் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் காலியான சண்டூர் தொகுதியில், தன் மகள் சைதன்யாவுக்கு சீட் அளிக்கும்படி துக்காராம், மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்கிறார்.
இதற்கிடையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், தன் ஆதரவாளருக்கு சீட் பெற முயற்சிக்கிறார். இதனால் எம்.பி., துக்கராம் அதிருப்தியில் இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ., சார்பில் பல்லாரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, தோல்வி அடைந்த ஸ்ரீராமுலு, சண்டூர் தொகுதியில் சீட் எதிர்பார்க்கிறார்.

