ADDED : ஜூன் 12, 2024 12:18 AM

ஹாவேரி : கர்நாடக சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடக்கும், மூன்று தொகுதிகளில் போட்டியிட, காங்கிரஸ் தலைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
லோக்சபா தேர்தலில் ஹாவேரியில் போட்டியிட்ட காங்கிரசின் ஆனந்த்சாமி கடேதேவரமத் நேற்று அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் அடைந்த தோல்வியில் இருந்து, இன்னும் நான் வெளிவரவில்லை. ஷிகாவி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட எனக்கு சீட் வேண்டாம்.
தேர்தலில் வெற்றி, தோல்வி ஏற்படுவது சகஜம். எனக்கு ஓட்டு போட்டவர்களுக்கு நன்றி. ஹாவேரி தொகுதியில், உள் ஒப்பந்த அரசியல் நடக்கவில்லை. அப்படி நடந்து இருந்தால் 6,62,025 ஓட்டுகள் வாங்கி இருக்க மாட்டேன். ஷிகாவியில் சாதாரண தொண்டனுக்கு வாய்ப்பு அளித்து, அவரை வெற்றி பெற செய்வோம்.
இவ்வாறு கூறினார்.
லோக்சபா தேர்தலில் தோற்றவர்களுக்கு, இடைத்தேர்தலில் போட்டியிட பயம் வந்து உள்ளது. பெங்களூரு ரூரல் தொகுதியில் தோற்று போன, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ், சென்னப்பட்டணாவில் போட்டியிட தயக்கம் காட்டி வருகிறார். பல்லாரி சண்டூர் தொகுதியிலும், இடைத்தேர்தலில் போட்டியிட, பலர் ஆர்வம் காட்டவில்லை.
பொதுவாக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்று, அனைவரும் கூறுவது உண்டு. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், பா.ஜ., - கூட்டணி பலமாக இருப்பதால், இடைத்தேர்தலில் போட்டியிட்டாலும் தோற்று விடுவோம் என்று, காங்கிரசார் தயக்கம் காட்ட ஆரம்பித்து உள்ளனர்.