சென்னப்பட்டணாவில் போட்டி? பா.ஜ., யோகேஸ்வர் சூசகம்!
சென்னப்பட்டணாவில் போட்டி? பா.ஜ., யோகேஸ்வர் சூசகம்!
ADDED : ஆக 05, 2024 09:51 PM

ராம்நகர் : சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில், போட்டியிட வேண்டும் என்பதில் பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் மிகவும் ஆர்வம் காண்பிக்கிறார். இதற்காக மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமியின் மனதை கரைக்க முயற்சிக்கிறார்.
ராம்நகர் சென்னப்பட்டணா தொகுதி ம.ஜ.த., -- எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில், பா.ஜ., கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சரானார்.
இடைத்தேர்தல்
குமாரசாமி எம்.பி.,யானதால் காலியான சென்னப்பட்டணா தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்கும். இந்த தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டியிடுவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜ., - எம்.எல்.சி., யோகேஸ்வர் போட்டியிட, ஆர்வம் காண்பிக்கிறார். டில்லியில் பலமுறை குமாரசாமியை சந்தித்து 'சீட்' கேட்டுள்ளார்.
இது குறித்து, யோகேஸ்வர் கூறியதாவது:
என் அரசியல் வாழ்க்கையில், அரசியல்வாதிகள், நலம் விரும்பிகளின் பங்களிப்பு மகத்தானது. சென்னப்பட்டணாவில் நான் போட்டியிட வேண்டும் என, தொகுதி மக்கள் கட்சி, ஜாதி பாகுபாடின்றி விரும்புகின்றனர்.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆகஸ்ட் 11ல் நடக்கவுள்ளது. நான் அரசியலில் இருக்க வேண்டுமா, வேண்டாமா, சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து, அன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
ஆட்சேபனை
இடைத்தேர்தலில் கூட்டணி சார்பில், எனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சூழ்நிலையும் உள்ளது. ஆனால் சிலர் அரசியல் காரணங்களால், எனக்கு சீட் கொடுக்க ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். யார் போட்டியிடுவது என்பது பற்றி, டில்லியில் முடிவு செய்யப்படும்.
என் அரசியல் பயணம் துவங்கிய பின், இதுவரை ஒன்பது தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். முதல் முறை தேர்தலில் போட்டியிட்ட போது, மக்கள் என்னை கைவிடவில்லை. அநியாயத்துக்கு ஆளானவர்களை காப்பாற்றுவது இந்த மண்ணின் குணமாகும்.
தேர்தல்கள் எனக்கு புதிதல்ல. தொகுதி நலனை கருதி, என்ன முடிவு எடுத்தாலும் மக்கள் என்னுடன் நின்றுள்ளனர். இப்போதும் என்னை காப்பாற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.