ADDED : ஜூலை 11, 2024 06:32 AM
பெங்களூரு, : முதல்வர் சித்தராமையா மீது தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டுள்ளது.
'மூடா' வீட்டுமனைகள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பெயரில் 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் சித்தாரமையா மீது, மைசூரின் விஜயநகர் போலீஸ் நிலையத்தில், சமூக ஆர்வலர் ஸ்னேஹமயி கிருஷ்ணா புகார் அளித்துள்ளார்.
தன் மனைவி பெயரில் இருந்த, 3.16 ஏக்கர் விவசாய நிலத்தை மூடா சட்டவிரோதமாக கையகப்படுத்தியது. அதற்கு மாற்றாக வீட்டுமனை வழங்கியதாக முதல்வர் சித்தாரமையா கூறியுள்ளார். மனைவி பெயரில் விவசாய நிலம் இருந்ததை பற்றி, அவர் தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் கமிஷனிடம் அறிவிக்கவில்லை என, கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, சமூக ஆர்வலர் ஆபிரஹாம், மாநில தேர்தல் கமிஷனில் நேற்று புகார் அளித்தார். அதில், 'சித்தராமையா, தன் மனைவி பெயரில் 3.16 ஏக்கர் நிலம் இருந்ததாக, இப்போது கூறியுள்ளார்.
ஆனால் தேர்தலில் போட்டியிட்டபோது, பிரமாண பத்திரத்தில் குறிப்பிடவில்லை. இந்த விபரங்களை மூடிமறைத்துள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.