ADDED : ஆக 22, 2024 12:58 AM
அமராவதி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஐந்தாண்டு கால ஆட்சியின் போது, முதல்வர் அலுவலகத்துக்கு முட்டை பப்ஸ் வாங்கியதாக 3.6 கோடி ரூபாய் செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. அவர் பதவிக்கு வந்த உடன், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
தற்போது அந்த விசாரணை நடந்து வரும் நிலையில், அதில் முட்டை பப்ஸ் ஊழலும் சேர்ந்துள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் 2019 முதல் 2024 வரையிலான ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், முதல்வர் அலுவலகம் முட்டை பப்சுக்கு 3.62 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தெலுங்கு தேசம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்படி முட்டை பப்சுக்கு சராசரியாக ஆண்டுக்கு 72 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 986 முட்டை பப்ஸ் வாங்கினால் இந்த அளவு செலவாகும் என சமூக வலைதளங்களில் ஆளுங் கட்சியினர் பதிவிட்டுள்ளனர். அரசு பணத்தில் எந்தளவு மோசடி நடந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று கூறியுள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சியினர் திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பியுள்ளதாக கூறியுள்ளது.