தேர்தல் நடத்தை விதி மீறல் செயலியில் குவியும் புகார்
தேர்தல் நடத்தை விதி மீறல் செயலியில் குவியும் புகார்
ADDED : மார் 29, 2024 08:46 PM

புதுடில்லி :லோக்சபா தேர்தல் தொடர்பான அறிவிப்பு மார்ச் 16ல் வெளியிடப்பட்டது. அப்போது பேட்டியளித்த தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார், 'ஓட்டளிக்க பணம் வினியோகம் செய்தல், தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து, 'சி - விஜில்' செயலி வாயிலாகவும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 79,000 புகார்கள், சி - விஜில் செயலி வாயிலாக பெறப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கமிஷன் அதிகாரி ஒருவர் மேலும் கூறியதாவது:
விதி மீறல் புகார் தொடர்பாக பெறப்பட்ட மொத்த புகார்களில், 99 சதவீத புகார்களுக்கு தேர்தல் கமிஷன் தீர்வு கண்டுள்ளது. இதில், 89 சதவீத புகார்கள் 100 நிமிடத்துக்கு உள்ளாகவே முடிவு எட்டப்பட்டது.
சட்டவிரோதமான பதாகைகள் மற்றும் பேனர்கள் வைத்துள்ளதாக 58,500 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஓட்டளிக்க பணம் வினியோகம், பரிசு மற்றும் மது சப்ளை செய்ததாக 1,400 புகார்கள் வந்துள்ளன. சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2,454 புகார்கள் பெறப்பட்டன.
துப்பாக்கிகளை காட்டி மிரட்டியதாக பெறப்பட்ட 535 மனுக்களில், 529 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பின்னரும் பிரசாரம் செய்ததாக 1,000 புகார்களும் பெறப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

