ADDED : மே 17, 2024 05:41 AM
பெங்களூரு : கோடை விடுமுறையில் சில நாட்களை தியாகம் செய்து, சிறப்பு வகுப்பகள் நடத்த பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு - -2 அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு - -2 என்பது, 2024ல் தேர்வு எழுத பதிவு செய்து, எழுத முடியாமல் போனவர்கள், தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப்படுவதாகும்.
இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தும்படி உயர்நிலை பள்ளிகளுக்கு, தேர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் கோடை விடுமுறை விடுமுறையில், பணியாற்ற வேண்டியுள்ளது.
அரசின் கல்வி அட்டவணைப்படி, மே 29ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை உள்ளது. ஆனால் மே 15ம் தேதியில் இருந்தே, சிறப்பு வகுப்புகள் நடத்த, ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிந்த பின், ஆசிரியர்கள் லோக்சபா பணியில் ஈடுபட வேண்டி வந்தது. இப்போது சிறப்பு வகுப்புகளை நடத்த ஆஜராகும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை குறைக்கப்பட்டதால், ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எனவே ஆசிரியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
***
