டீஸ்டா நதியை பராமரிக்க உதவி மோடி - ஹசீனா பேச்சில் முடிவு
டீஸ்டா நதியை பராமரிக்க உதவி மோடி - ஹசீனா பேச்சில் முடிவு
ADDED : ஜூன் 23, 2024 03:11 AM

புதுடில்லி : வங்கதேசத்தின் டீஸ்டா நதியை பராமரிக்க மற்றும் நிர்வகிக்கும் மிகப் பெரும் திட்டத்தை துவக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அனுப்ப, பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையே நடந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா, இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது, டிஜிட்டல் தொழில்நுட்பம், நீலப் பொருளாதாரம், ரயில்வே, விண்வெளி, பசுமை தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில், 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
ரயில் போக்குவரத்து
இதன்படி, கோல்கட்டா - ராஜ்சகாலி இடையே புதிய பயணியர் ரயில் சேவையை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், வங்கதேச ரயில்வே சார்பில், நம் நாட்டின் ஹல்திபாரில் இருந்து, வங்கதேசத்தின் சிலாஹாடி இடையே சரக்கு ரயில் போக்குவரத்தை துவக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோல்கட்டா - சிட்டஹாங் பஸ் சேவையை துவக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் சிராஜ்காஞ்சில் கன்டெய்னர் டெப்போ, இந்தியா சார்பில் கட்டித் தரப்பட உள்ளது.
இதைத் தவிர, வங்கதேசத்தின் டீஸ்டா நதியைப் பராமரிக்க மற்றும் நிர்வகிக்கும் மிகப் பெரும் திட்டத்தை துவக்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. இதற்காக, நிபுணர் குழுவை இந்தியா விரைவில் அனுப்பும். அதனடிப்படையில், இந்தத் திட்டத்தை, இந்தியா தன் நிதியில் செயல்படுத்தும்.
இந்த நதி இமயமலையில் உருவாகி, சிக்கிம், மேற்கு வங்கம் வழியாக, வங்கதேசத்துக்குள் பாய்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த, சீனா ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே, 1996ல் கங்கை நதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, டீஸ்டா நதியை பராமரிக்க மற்றும் நிர்வகிக்க இந்தியா உதவும்.
மேலும், வங்கதேசத்தில் டீஸ்டா நதியின் குறுக்கே, நீர்த்தேக்கங்கள் அமைப்பது போன்றவை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின் கீழ், டீஸ்டா நதியில் நீர் பங்கீடு செய்து கொள்ளப்படும்.
கூட்டறிக்கை
கடந்த, 2011 செப்டம் பரில் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், வங்கதேசம் சென்றபோது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
பிரதமர் மோடி, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா இடையேயான பேச்சின்போது, ராணுவத் துறையில் ஒத்துழைப்பு அளிப்பது, எல்லையைப் பராமரிப்பது, பயங்கரவாதத்தை தடுப்பது உட்பட பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக, பேச்சுக்குப் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

