ADDED : ஜூலை 14, 2026 08:02 PM
ஈரான் துணை துாதரை நேரில் அழைத்து மத்திய அரசு... இந்தியர் கொல்லப்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை
புதுடில்லி: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில், ஈரான் துணை துாதர் முகமது ஜாவத் ஹொசைனியை நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, ‘இத்தகைய செயல்கள், ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன’ என, குறிப்பிட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் – அமெரிக்கா இடையே, பிப்., 28ல் தொடங்கிய மோதல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தம் ஒப்பந்தமும் கையெழுத்தானது. எனினும், ஒப்பந்தத்தை மீறி இரு நாடுகளும் மீண்டும் சண்டையிட்டு வருகின்றன.
இதனால் கடுப்பான ஈரான், தன் ஒரே ஆயுதமான, உலகின், 20 சதவீத சரக்கு போக்குவரத்து கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளது. எதிர்முனையில் அமெரிக்காவும் முற்றுகையிட்டு உள்ளதால், மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
இந்த சூழலில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் தேசியக்கொடி ஏந்திய, ‘எம்.டி.அல் பஹியா, எம்.டி.மொம்பாசா’ ஆகிய கப்பல்கள் நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றன. இந்த இரு கப்பல்களிலும் மொத்தம், 46 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில், 30 பேர் இந்தியர்கள்.
அப்போது, ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலில், எம்.டி.அல் பஹியா கப்பலில் இருந்த, 12 இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் காயமடைந்தார். அதே போல, ‘எம்.டி.மொம்பாசா’ கப்பலில் இருந்த, 18 இந்தியர்களில் ஒன்பது பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று, இந்த தாக்குதல் தொடர்பாக டில்லியில் உள்ள ஈரான் துாதரகத்தின் துணை துாதர் முகமது ஜாவத் ஹொசைனியை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனத்தை தெரிவித்தது.
இது குறித்து, நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
மேற்காசிய பிராந்தியத்தில் மீண்டும் அதிகரித்து வரும் மோதல்கள் கவலை அளிக்கின்றன. பிராந்திய அமைதி, பாதுகாப்பிற்காக வன்முறையை உடனடியாக கைவிட்டு, பேச்சு மற்றும் துாதரக ரீதியில் தீர்வு காண அமெரிக்கா – ஈரான் முன்வர வேண்டும். சர்வதேச சட்டங்களுக்கு இணங்க, ஹார்முஸ் ஜலசந்தியில் கடல்சார் வணிகம் மற்றும் போக்குவரத்து தடையின்றி நடப்பதை உறுதி செய்ய, வணிகக் கப்பல்கள் மற்றும் உட்கட்டமைப்பு மீதான தாக்குதல்கலை நிறுத்த வேண்டும்.
ஐக்கிய அரபு எமிரேட்சின் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். இத்தகைய செயல்கள், உலகின் முக்கிய கடல்சார் வணிகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
தாக்குதலில் உயிரிழந்த இந்தியருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள நம் துாதரகம் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்ட இந்திய பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நம் துாதரகம் செய்து வருகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையே போர் தொடங்கியதில் இருந்து, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், அந்நாடுகளுக்கு இடையிலான மோதலில் சிக்கி, இதுவரை, ஒன்பது இந்திய கப்பல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
