பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் கர்நாடகா முழுதும் பா.ஜ., போராட்டம்
பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் கர்நாடகா முழுதும் பா.ஜ., போராட்டம்
ADDED : ஜூன் 18, 2024 06:26 AM

பெங்களூரு: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மாநில காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடகா முழுதும் பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
கர்நாடகாவில், பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை, மாநில அரசு இரண்டு நாட்களுக்கு முன் உயர்த்தியது. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோல் 3 ரூபாயும்; டீசல் 3.50 ரூபாயும் உயர்ந்தது.
இதை கண்டித்து, மாநிலம் முழுதும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பா.ஜ.,வினர் நேற்று போராட்டம் நடத்தினர். பெங்களூரு, மைசூரு, ஷிவமொகா, பெலகாவி, உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உட்பட பல பகுதிகளில் போராட்டம் தீவிரமாக இருந்தது.
பெங்களூரில், மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், எம்.எல்.ஏ., ரகு, எம்.எல்.சி., சி.டி.ரவி ஆகியோர், மாட்டு வண்டியில் சுதந்திர பூங்காவிற்கு வந்தனர்.
நகர பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், முன்னாள் கவுன்சிலர்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்றனர். 'ஏழைகளின் வயிற்றில் அடித்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார்' என்று பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பினர்.
இரு சக்கர வாகனங்களை கையில் ஏந்தி வருவது, உருவ பொம்மை எரிப்பது உட்பட வெவ்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், முதல்வர் இல்லத்தை முற்றுகையிட புறப்பட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். பி.எம்.டி.சி., பஸ்களில் ஏற்றி சென்று, பின்னர் விடுவித்தனர்.
அப்போது, 'விலை உயர்வை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடர்ந்து நடத்துவோம்' என்று விஜயேந்திரா தெரிவித்தார். பா.ஜ., போராட்டத்தால், சேஷாத்திரி சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, காந்திநகர், அரண்மனை சாலை சுற்று வட்டார பகுதிகளில், இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது.