பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்
ADDED : மே 21, 2024 06:25 AM

பெங்களூரு: ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவரது வீட்டில் பணியாற்றிய 47 வயதுள்ள பெண், ரேவண்ணாவும், அவரது மகன் பிரஜ்வலும் தன்னை பலாத்காரம் செய்ததாக, ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், ஏப்ரல் 28ம் தேதி புகார் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், தந்தை, மகன் மீது பலாத்கார வழக்கு உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான், பிரஜ்வல் தலைமறைவாக உள்ளார்.
வேலைக்காரப் பெண்ணை கடத்திய வழக்கில், ரேவண்ணாவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்ட இருந்தது. இந்த ஜாமின் நேற்றுடன் நிறைவு பெற்றது.
இதனால், மக்கள் பிரதிநிதிகள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும், பெங்களூரு 42வது சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெ.ப்ரீத் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரிக்கப்பட்டது.
அப்போது, எந்த காரணத்துக்கும், அவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, அரசு தரப்பில், வழக்கறிஞர்கள் அசோக் நாயக், ஜெய்னா கோட்டாரி வாதாடினர்.ஆனால், பல்வேறு வழக்குகளை சுட்டிக்காட்டி ரேவண்ணா தரப்பு வழக்கறிஞர் நாகேஷ் வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ப்ரீத், ரேவண்ணாவுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஒருவர் உத்தரவாதத்துடன், 5 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் உட்பட சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜாமின் உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு, மேல்முறையீடு செய்யும்வாய்ப்பு உள்ளது. இதற்காக, மூத்த வழக்கறிஞர் ரவிவர்மா குமார் நேற்று நியமிக்கப்பட்டுள்ளார்.

