ADDED : செப் 07, 2024 07:39 AM

ராய்ச்சூர்: அரசு பஸ் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை நேரில் பார்த்து மருத்துவ கல்வித் துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் ஆறுதல் கூறினார்.
ராய்ச்சூர் மாவட்டம், மான்வி லயோலா பள்ளி பஸ், 40 மாணவர்களுடன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. கபகால் கிராமம் அருகே சென்றபோது, எதிரே வந்த கே.எஸ்.ஆர்.டி.சி., அரசு பஸ் மோதியது.
இந்த விபத்தில், இப்பள்ளியை சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவர் சமரத் அமேரஷ், 7, ஏழாம் வகுப்பு மாணவர் மரேஷ், 12, ஆகியோர் உயிரிழந்தனர்.
மூன்று மாணவர்கள், தங்களின் கால்களை இழந்துள்ளனர். பள்ளி வாகன ஓட்டுனர், அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 17 மாணவர்கள் படுகாயமடைந்தனர்; 23 மாணவர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த மருத்துவ கல்வித் துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், நேற்று மருத்துவமனையில் மாணவர்கள், பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
விபத்தில் இரு குழந்தைகள் இறந்துள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு தலா 5 லட்சம் ரூபாயும்; காயமடைந்தவர்களுக்கு மூன்று லட்சம் ரூபாயும் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் நிலை குறித்து, பெங்களூரில் உள்ள திறமையான நிபுணர்களிடம் ஆலோசித்துள்ளேன். விபத்துக்கான காரணம் குறித்து கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவருக்கு, மருத்துவ கல்வித் துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் ஆறுதல் கூறினார். இடம்: ராய்ச்சூர்.