ADDED : ஜூன் 20, 2024 05:58 AM
மங்களூரு; மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபரை, இறந்து விட்டதாக குடும்பத்தினரிடம் கூறி, மருத்துவமனை ஊழியர்கள் குளறுபடி செய்துள்ளனர்.
தட்சிண கன்னடா, மங்களூரின், உப்பினங்கடியில் வசிப்பவர் சேகர் கவுடா, 55. இவர் மங்களூரின், வெங்கப்ப கவுடா என்பவர் வீட்டில் வேலை செய்தார். ஜூன் 9ல் நகர்பகுதிக்கு சென்ற போது நரம்பு தளர்ச்சியால் மயங்கி விழுந்தார். இவரை வென்லாக் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இவர் சிகிச்சையில் இருக்கும் போதே, மருத்துவமனை ஊழியர்கள், நோயாளி இறந்து விட்டதாக பாண்டேஸ்வரா போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் தகவல் தெரிவித்தனர். போலீசாரும் வெங்கப்பா கவுடாவிடம் விஷயத்தை கூறினர்.
அவரும், சேகர் கவுடாவின் குடும்பத்துக்கு தகவல் தெரிவித்து, மங்களூருக்கு வந்து அவரது உடலை பெறும்படி கூறினார். குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்து, போலீசாருடன் பிணவறையில் தேடி பார்த்த போது, அவரது உடல் இல்லை.
குழப்பமடைந்த அவர்கள், சேகர்கவுடா சேர்க்கப்பட்ட வார்டுக்கு சென்று பார்த்த போது, அவர் சிகிச்சையில் இருப்பது தெரிந்தது. மருத்துவமனை ஊழியர்களே, குளறுபடிக்கு காரணம் என்பது தெரிந்தது.
சேகர் கவுடா, புத்துாரின் முன்னாள் எம்.எல்.ஏ., சஞ்சீவ் மகந்துாருவின் துாரத்து உறவினர். இவருக்கும் சேகர்கவுடா இறந்ததாக தகவல் கூறப்பட்டது. அவரும் மருத்துவமனையை தொடர்பு கொண்டு, தாமதம் செய்யாமல் உடலை ஒப்படைக்கும்படி வலியுறுத்தினார். தற்போது சேகர்கவுடா உயிரோடு இருப்பதை கண்டு, மகிழ்ச்சிஅடைந்தார்.