பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் குழப்பம்; குளிர்காய நினைக்கும் மரிதிப்பே கவுடா
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் குழப்பம்; குளிர்காய நினைக்கும் மரிதிப்பே கவுடா
ADDED : மே 21, 2024 09:51 PM

கர்நாடகாவில் மூன்று ஆசிரியர், மூன்று பட்டதாரி தொகுதிகளுக்கு ஜூன் 3ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர், ஹாசன் மாவட்டங்களை உள்ளடக்கிய தெற்கு ஆசிரியர் தொகுதியில் காங்கிரசின் மரிதிப்பே கவுடா போட்டியிடுகிறார்.
இவர், இத்தொகுதியில் 2000ல் காங்கிரஸ்; 2006ல் சுயேச்சை; 2012, 2018ல் ம.ஜ.த., என தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர். லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தியில் இருந்த அவர், தனது எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்தார்.
மேலவை தேர்தல் தேதி வெளியானதும், இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக மரிதிப்பே கவுடா பெயர் அறிவிக்கப்பட்டது. இவர், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்.
கூட்டணி குழப்பம்
இத்தொகுதியில், பா.ஜ.,வில் மைசூரு பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினர் நிங்கராஜ் கவுடா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நடந்த அரசியல் மாற்றத்தில், இத்தொகுதி ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக விவேகானந்தன் களத்தில் உள்ளார். இவரும், மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் தான்.
அதிகாரப்பூர்வ வேட்பாளர் மனு தாக்கலுக்கு முன், அதிருப்தியில் இருந்த மைசூரு பல்கலைக்கழக சிண்டிகேட் முன்னாள் உறுப்பினர் நிங்கராஜ் கவுடா வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனால், பா.ஜ.,வில் குழப்பம் ஏற்பட்டது. நிங்கராஜ் கவுடாவிற்கு பா.ஜ., 'பி பார்ம்' வழங்கவில்லை. பா.ஜ., தலைவர்களும் அவரை சமாதானம் செய்தனர். இதையடுத்து, தனது வேட்பு மனுவை அவர் வாபஸ் பெற்றார்.
இதற்கிடையில், சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த ம.ஜ.த.,வின் முன்னாள் எம்.எல்.சி., ஸ்ரீகண்டே கவுடாவை மாநில தலைவர் குமாரசாமி, மூத்த தலைவர் ஜி.டி.தேவகவுடா ஆகியோர் சமாதானம் செய்து, வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்தனர். ஆனாலும் அவரின் ஆதரவாளர்கள் இன்னும் அதிருப்தியில் உள்ளனர்.
தப்பு கணக்கு
கூட்டணி வேட்பாளர் பெயர் அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடியால், சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று காங்கிரசின் மரிதிப்பே கவுடா கணக்கு போட்டிருந்தார். ஆனால், அக்கட்சி தலைவர்களின் முயற்சியால் அதிருப்தியாளர்கள் சமாதானம் அடையாமல் இருப்பதால், செய்வதறியாது திகைத்தார்.
இருந்தாலும் தனது பிரசாரத்தை வேகப்படுத்தி உள்ளார். கடந்த முறையை விட, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காண்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஓட்டு வேட்டை
இதற்காக உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பி.யு., கல்லுாரி விரிவுரையாளர்கள், பட்டதாரி கல்லுாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பதிவு செய்யப்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இது மட்டுமின்றி ஆசிரியர் சங்கங்கள் மூலமும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
தான் செய்த பணிகள், செய்யப்போகும் பணிகள் குறித்து விரிவாக கூறி வருகிறார். மொபைல் போன், வாட்ஸாப் மூலமும், சிறுசிறு சந்திப்புகள் மூலமும் ஓட்டு வேட்டை ஆடி வருகிறார்.
சமூக வலைதளங்களையும் பயன்படுத்தி வருகிறார். கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் மூலமும் வாக்காளர்களை சந்தித்து பேசி வருகிறார். வாக்காளர்களின் முகவரிக்கு கடிதங்கள் எழுதியும், ஆதரவு திரட்டி வருகிறார்.
- நமது நிருபர் -

