ADDED : ஜூன் 27, 2024 06:41 AM

ஹாவேரி : புதிய எம்.பி., பசவராஜ் பொம்மையின் ராஜினாமாவால், காலியான ஷிகாவி சட்டசபை தொகுதி சீட்டுக்கு, பா.ஜ.,வில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரசிலும் சீட் வாங்க பலரும் முட்டி மோதுகின்றனர்.
பா.ஜ., வின் பசவராஜ் பொம்மை, ஹாவேரியின், ஷிகாவி சட்டசபை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வானவர். அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தார். இம்முறை லோக்சபா தேர்தலில், ஹாவேரி தொகுதியில் இவருக்கு எதிர்பாராமல் கட்சி மேலிடம் சீட் கொடுத்தது. இவரும் வெற்றி பெற்று, எம்.பி.,யானார்.
இவரால் காலியான ஷிகாவி சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தன் வசம் உள்ள தொகுதியை தக்க வைத்து கொள்ள, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் அரசு இருப்பதால், வெற்றி பெற, பா.ஜ., அதிகம் போராட வேண்டும். ஷிகாவி தொகுதியில், பா.ஜ.,வில் பலரும் சீட் எதிர்பார்க்கின்றனர்.
பரத், துன்டி கவுடா, சசிதர் எலிதாரா உட்பட பலரும் சீட் கேட்டு பா.ஜ., தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். இவர்கள் கடந்த சட்டசபை தேர்தலிலும், சீட் கேட்டு ஏமாந்தவர்கள்.
ஷிகாவி தொகுதி, தார்வாட் லோக்சபா தொகுதி எல்லையில் உள்ளது. ஷிகாவி தொகுதியில், பா.ஜ., வேட்பாளரை விட, காங்கிரஸ் வேட்பாளர் 8,500 ஓட்டுகள் அதிகம் பெற்றிருந்தார். எனவே தொகுதியில் காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது.
இதனால், காங்., கட்சியிலும் சீட்டுக்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு சீட் கொடுத்தால், மற்றவர் கோபமடைவர். உட்கட்சி பூசலே கட்சிக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
பா.ஜ., காங்கிரஸ் தலைவர்கள், தங்களின் தொண்டர்கள் படையுடன், தொகுதியில் சுற்றி வந்து மக்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சிக்கின்றனர்.
யார் வீட்டில் நிகழ்ச்சிகள், திருமணம், பிறந்த நாள் விழா நடந்தாலும், அதில் பங்கேற்று வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
தங்கள் தொண்டர் பலம், பண பலத்தை காண்பித்து, சீட் பெற முயற்சிக்கின்றனர். ஆதரவாளர்களுடன் பெங்களூருக்கு வந்து, முக்கிய தலைவர்களை சந்தித்து, சீட் கேட்கின்றனர். 'எங்களிடம் தொண்டர் படையே உள்ளது. செலவிடவும் தயாராக இருக்கிறோம். சீட் கொடுங்கள்' என பிடிவாதம் பிடிக்கின்றனர்.
ஷிகாவியை சேர்ந்த சையம் அஜ்ஜம்பீரா காத்ரியும் சீட் கேட்கிறார். தன் பலத்தை காண்பிக்க, பாதயாத்திரையும் நடத்தினார். லோக்சபா தேர்தலில் தோற்ற வினய் அசூட்டியும், தொகுதியில் எனக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. சீட் தாருங்கள் என, மன்றாடுகிறார்.
இதற்கிடையில், சவனுர் தொட்டஹுனசே மல்மடத்தின் சென்ன பசவேஸ்வர சுவாமிகளும், ஷிகாவி தொகுதியில் போட்டியிட ஆர்வம் காண்பிக்கிறார்.
சீட் கேட்டு மாவட்ட காங்கிரஸ் தலைவரிடம் விண்ணப்பம் அளித்துள்ளார். சீட் கிடைக்காவிட்டால், சுயேச்சையாக களமிறங்கவும் சென்ன பசவேஸ்வரா சுவாமிகள் ஆலோசிக்கிறார்.