ADDED : செப் 14, 2024 08:52 PM
ஜெய்ப்பூர்,:அண்டை மாநிலமான ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜூபைர் கான், உடல் நலக்குறைவால் அடைந்தார்.
அல்வார் மாவட்டம் ராம்கர் தொகுதியில் இருந்து நான்கு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த ஜுபைர் கான்,62, உடல் நலக்குறைவால் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை 5:50 மணிக்கு அவரது வீட்டில் உயிர் பிரிந்தது என அவரது மனைவி ஷபியா ஜுபைர் தெரிவித்தார்.
கவர்னர் ஹரிபாவ் பகடே, முதல்வர் பஜன்லால் சர்மா, சட்டசபை சபாநாயகர் வாசுதேவ் தேவ்னானி, மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் தோதாஸ்ரா, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது, இறுதிச் சடங்குகள் நேற்று மாலை நடந்தன.
கான் மறைவைத் தொடர்ந்து ராஜஸ்தான் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 65 ஆக குறைந்தது. மொத்தம் 200 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் தற்போது 7 தொகுதிகள் காலியாக இருக்கின்றன.