ADDED : மே 16, 2024 10:35 PM

ஷிவமொகா:
''முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியது போன்று, 28 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேளூர் கோபால கிருஷ்ணா சவால் விடுத்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தல் முடிவு வெளியான பின், கர்நாடக காங்கிரஸ் அரசு கவிழும் என, மஹாராஷ்டிரா முதல்வர் ஏகநாத் ஷிண்டே உட்பட பா.ஜ.,வினர் கூறியுள்ளனர். எப்படி கவிழ்கிறது என்பதை, பார்ப்போம்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், அவரது மகன்களும் ஷிகாரிபுராவை மட்டும் மேம்படுத்தினர். மற்ற தாலுகாக்களை மேம்படுத்தவில்லை. தவறான வழியில் சம்பாதித்த பணத்தை வைத்து, மாநில காங்கிரஸ் அரசை கவிழ்க்க முடியுமா.
கடந்த முறை 17 முட்டாள்கள், காங்கிரசை விட்டு பா.ஜ.,வுக்கு சென்றனர். இப்போது அத்தகைய நபர்கள் இல்லை. எடியூரப்பா 28 லோக்சபா தொகுதிகளில், பா.ஜ., வெற்றி பெறும் என, கூறுகிறார். அவர் கூறியது போன்று 28 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றால், நான் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறேன். வெற்றி பெறாவிட்டால், எடியூரப்பாவும், அவரது மகனும் அரசியல் ஓய்வு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***

