ADDED : ஜூலை 26, 2024 12:27 AM
புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., சரண்ஜித் சிங் சன்னிக்கும், பா.ஜ., - எம்.பி., ரவ்நீத் சிங் பிட்டுவுக்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டதை அடுத்து, லோக்சபா இரண்டு முறை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.
மதிய இடைவேளைக்கு பின் லோக்சபா நேற்று கூடியபோது, காங்கிரஸ் உறுப்பினர் சரண்ஜித் சிங் சன்னி பேசத் துவங்கினார்.
காங்.,கில் இருந்து சமீபத்தில் விலகி பா.ஜ.,வில் இணைந்த மத்திய இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு குறித்தும், அவரது தாத்தாவும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான பியாந்த் சிங் படுகொலை குறித்தும், சில தனிப்பட்ட விஷயங்களை சன்னி பேசினார்.
இதனால் சன்னிக்கும், பிட்டுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பதிலுக்கு, சரண்ஜித் சிங் சன்னி மற்றும் காங்., மூத்த தலைவர் சோனியா குறித்து சில தனிப்பட்ட கருத்துகளை பிட்டு தெரிவித்தார்.
இதனால் சபையில் வார்த்தைப்போர் மூண்டது. இதையடுத்து சபை, 30 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு மீண்டும் சபை கூடியபோது, சபையில் நடந்த விவாதத்தை சபை குறிப்பில் இருந்து நீக்கிவிட்டு விவாதத்தை தொடர உத்தரவிடும்படி ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து, சபையின் கண்ணியத்தை காக்கும்படி ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை சபாநாயகர் கேட்டுக் கொண்டார். காங்., உறுப்பினர் சரண்ஜித் சிங் சன்னி உரையைத் தொடர்ந்தார்.
அப்போது, ''ராகுலை நேற்று முன்தினம் சந்தித்த விவசாய சங்கத்தினர் பிரதமரை சந்திக்கவும் நேரம் கேட்டனர். ஆனால் நேரம் ஒதுக்கப்படவில்லை. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை,'' என குற்றம் சாட்டினார்.
இடைமறித்த வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், சபையில் சன்னி தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதற்கு, ''கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை அரசு ஏவுகிறது,'' என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் கிரண் ரிஜிஜு, சன்னிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினார்.
சரண்ஜித் சிங் சன்னி பேசி முடித்த பிறகும், ஆளும் தரப்பு - எதிர் தரப்பு இடையே வார்த்தைப்போர் தொடர்ந்தது. இதையடுத்து சபை பிற்பகல் 3:00 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக சரண்ஜித் சிங், காலிஸ்தான் பிரிவினைவாதியும், எம்.பி.,யுமான அம்ரித்பால் சிங் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதை எமர்ெஜன்சி காலத்துடன் ஒப்பிட்டு பேசினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரிவினை வாதத்துக்கு ஆதரவாக பேசியதாக சரன்ஜித்திற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்தது.

