காங்., - எம்.எல்.ஏ.,வுக்காக பா.ஜ., தொண்டர் பிரார்த்தனை
காங்., - எம்.எல்.ஏ.,வுக்காக பா.ஜ., தொண்டர் பிரார்த்தனை
ADDED : ஆக 19, 2024 10:51 PM

ஷிவமொகா:
பா.ஜ., தொண்டர் ஒருவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வெற்றி பெற்றதற்காக, பிரார்த்தனையை நிறைவேற்றியது அரசியல் 0வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு, 2023ல் நடந்த தேர்தலில் ஷிவமொகா தொகுதியில் காங்கிரசில் பேளூர் கோபாலகிருஷ்ணாவும், பா.ஜ.,வில் ஹரதாளு ஹலப்பாவும் மோதினர். இதில், கோபாலகிருஷ்ணா வெற்றி பெற்றார்.
தொகுதி பா.ஜ., தொண்டரான ஹரிஷ் பிரபு, காங்கிரசின் கோபாலகிருஷ்ணாவின் தீவிர விசுவாசி.
தன் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றாத ஹரிஷ் பிரபு, கோபாலகிருஷ்ணா வெற்றி பெற வேண்டும் என, ஷிவமொகா நகரின் பிரசித்தி பெற்ற, சித்தி விநாயகர் கோவிலில் வெண்ணெய் அலங்கார சேவை நடத்துவதாக, வேண்டி இருந்தார்.
அவரது வேண்டுதல் பலித்தது. எனவே, நேற்று சித்தி விநாயகர் கோவிலில் வெண்ணெய் அலங்கார சேவை நடத்தினார். தன் ஆதரவாளரின் விருப்பப்படி, கோபால கிருஷ்ணாவும் கோவிலுக்கு வந்து, பூஜையில் பங்கேற்றார்.
பின், ஹரிஷ் பிரபு அளித்த பேட்டி;
நான், கடந்த 30 ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வுடன் இணைந்திருக்கிறேன். இப்போதும் பா.ஜ., தொண்டன். என் ரத்தத்தில் கட்சியின் தத்துவம், சித்தாந்தங்கள் கலந்துள்ளன.
ஆனால், கோபாலகிருஷ்ணாவின் மனித நேயம், மற்றவருக்கு உபகாரம் செய்யும் குணம், என்னை கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவருக்கு ஆதரவாக செயல்பட வைத்தது.
முந்தைய தேர்தலில் அவருக்கு, காங்கிரசில் சீட் கிடைக்க விடாமல் தடுக்க, பலர் சதி செய்தனர். எனவே அவருக்காக நான் பிரார்த்தனை செய்தேன். அவருக்கு சீட் கிடைத்து, அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
என் வேண்டுதல் பலித்ததால், எம்.எல்.ஏ., முன்னிலையில், பிரார்த்தனையை நிறைவேற்றினேன். வரும் நாட்களில், அவர் அமைச்சராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

