வாக்குறுதி திட்டங்களுக்கு காங்., - எம்.எல்.சி., ஆதரவு
வாக்குறுதி திட்டங்களுக்கு காங்., - எம்.எல்.சி., ஆதரவு
ADDED : ஜூன் 11, 2024 04:38 AM

பெங்களூரு: “கிரஹ லட்சுமி, கிரஹஜோதி உட்பட வாக்குறுதித் திட்டங்களை நிறுத்தும்படி வலியுறுத்தும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் வாய்க்கு பூட்டுப் போட வேண்டும்,” என, அக்கட்சி எம்.எல்.சி., தினேஷ் கூலிகவுடா வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஐந்து வாக்குறுதித் திட்டங்களை அறிவித்திருந்தது. இந்த திட்டங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தன. இதன் பயனாக 135 தொகுதிகளை கைப்பற்றி, காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.
இமேஜ் அதிகரிப்பு
இதே உற்சாகத்தில் முதல்வர் சித்தராமையா, பதவிக்கு வந்த சில மாதங்களில் கிரஹலட்சுமி, சக்தி, அன்னபாக்யா, கிரஹஜோதி உட்பட ஐந்து திட்டங்களையும் செயல்படுத்தினார். 56,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால், கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து உள்ளனர். அரசின் இமேஜும் அதிகரித்தது.
சட்டசபை தேர்தல் போன்று, லோக்சபா தேர்தலிலும், அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறலாம் என, காங்கிரசார் கனவு கண்டனர். வாக்குறுதித் திட்டங்கள் கை கொடுக்கும் என, மேலிடமும் நம்பியது.
கட்சிக்கு பின்னடைவு
ஆனால் எதிர்பார்ப்பு பொய்யானது. அதிகபட்சம் போராடியும் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. செல்வாக்குமிக்க அமைச்சர்களின் தொகுதிகளிலேயே, கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக முதல்வர் சித்தராமையாவின் தொகுதியிலேயே, காங்கிரஸ் வேட்பாளர் தோற்றார்.
இதனால் வாக்காளர்கள் மீது வெறுப்படைந்துள்ள, காங்., - எம்.எல்.ஏ.,க்கள், வாக்குறுதித் திட்டங்களை ரத்து செய்யும்படி, முதல்வருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். மைசூரில் தோற்ற லட்சுமண் உட்பட, பலரும் பகிரங்கமாகவே கூறுகின்றனர். இதை காங்., - எம்.எல்.சி., தினேஷ் கூலிகவுடா கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் சித்தராமையாவுக்கு, தினேஷ் கூலிகவுடா எழுதிய கடிதம்:
வாக்குறுதித் திட்டங்களை நிறுத்தும்படி கூறுவது சரியல்ல. மத்திய அரசின் தவறான கொள்கைகளால், விலை உயர்வால் ஏழைகள் தவிக்கின்றனர். இவர்களுக்கு உதவும் நோக்கில், சட்டசபை தேர்தலுக்கு முன்பு, ஐந்து வாக்குறுதித் திட்டங்களை காங்கிரஸ் அறிவித்தது.
பெரும்பான்மை
சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கொடுத்து, கட்சியை பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தினர். வாக்குறுதித் திட்டங்கள் நாட்டுக்கு முன்மாதிரியான, புரட்சிகரமான திட்டங்களாகும்.
மாதம் 2,000 ரூபாய் வழங்கும், கிரஹலட்சுமி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய வாய்ப்பு அளிக்கும் சக்தி, இலவச மின்சாரம் வழங்கும் கிரஹஜோதி உட்பட மற்ற திட்டங்கள், ஏழைகளுக்கு உதவியாக உள்ளன.
இந்த திட்டங்களால், சட்டசபை, லோக்சபா தேர்தலில் கட்சியின் ஓட்டு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. இது காங்கிரஸ் மீது, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காண்பிக்கிறது.
ஏழைகளுக்கு உதவும் திட்டங்களை, நிறுத்த வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் கூறுவதால், கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை குறையும். எனவே இது போன்று பேச வேண்டாம் என, எம்.எல்.ஏ.,க்களுக்கு புத்திமதி கூறுங்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

