காங்., - எம்.எல்.ஏ.,க்களால் அரசியல் மாற்றம் பா.ஜ., -- எம்.பி., பசவராஜ் பொம்மை கணிப்பு
காங்., - எம்.எல்.ஏ.,க்களால் அரசியல் மாற்றம் பா.ஜ., -- எம்.பி., பசவராஜ் பொம்மை கணிப்பு
ADDED : ஜூலை 22, 2024 06:24 AM
பெங்களூரு:''காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியால் அரசியல் மாற்றம் ஏற்படலாம். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள்,'' என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு, பா.ஜ., -- எம்.பி., பசவராஜ் பொம்மை 'அட்வைஸ்' கூறி உள்ளார்.
ஹாவேரி பா.ஜ., -- எம்.பி., பசவராஜ் பொம்மை, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் முறைகேடு செய்த பணத்தை, லோக்சபா தேர்தலுக்கு மதுபானம் வாங்கவும், விலை உயர்ந்த கார்கள் வாங்கவும் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இந்த முறைகேடு குறித்து முழுமையாக விசாரணை நடத்தினால், சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிடும்.
எங்கள் ஆட்சியில் 21 முறைகேடுகள் நடந்திருப்பதாக, சித்தராமையா கூறுகிறார். இது தொடர்பாக விசாரணை நடந்தால், அதை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
பொய் குற்றச்சாட்டு
பதவி, அதிகாரம் வரும் போகும். அதிகாரத்தை முதல்வர் தவறாக பயன்படுத்த வேண்டாம். எங்கள் ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகளுக்கு உரிய ஆவணங்களை, முதல்வர் கொடுக்க வேண்டும். ஏ.பி.எம்.சி.,யில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் போது, நான் விவசாய அமைச்சராக இல்லை. உள்துறை அமைச்சராக இருந்தேன்.
நான் முதல்வராக இருந்தபோது போவி சமூகத்தில் நடந்த முறைகேடு குறித்து, சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டேன்.
எங்கள் அரசு மீது 40 சதவீத பொய் குற்றச்சாட்டுகளை கூறினர். இதுவரை அந்த குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அக்கட்சிக்கு மறுபெயர் ஊழல்.
எங்களுக்கு எதிராக எந்த விசாரணை நடத்தினாலும் நாங்கள் சந்திப்போம். காங்கிரஸ் தலைவர்களை போல பயப்பட மாட்டோம்.
வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழல் குறித்து, அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் பயப்படுவது ஏன். அரசின் ஊழல்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்.
அரசியல் மாற்றம்
மாநிலத்தில் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாக்குறுதி திட்டங்களால் வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிக்கு செல்ல யோசிக்கின்றனர்.
எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியால் அரசியல் மாற்றம் ஏற்படலாம். ஷிகாவி தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், என் மகன் பரத்திற்கு சீட் தரும்படி நெருக்கடி கொடுக்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.