ADDED : மார் 25, 2024 06:44 AM
லோக்சபா தேர்தலில், 20 தொகுதிகளை கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ள காங்கிரஸ், இதற்காக வாக்குறுதி திட்டங்களை, அஸ்திரமாக பயன்படுத்துகிறது. பிரசாரம் செய்ய ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 15 'வாட்ஸாப்' குரூப்களை அமைத்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கும், 'சக்தி' திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவி தொகை வழங்கும் 'கிரஹ லட்சுமி. வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் மின்சாரம் வழங்கும் கிரஹ ஜோதி, பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் 'அன்னபாக்யா' திட்டம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு, மாதம் 3,000 உதவி தொகை வழங்கும், 'யுவ உத்சவா' திட்டம் என, ஐந்து முக்கிய திட்டங்களை அறிவித்தது.
இந்த திட்டங்கள், காங்கிரசை ஆட்சியில் அமர்த்தியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுகின்றன. இது அரசின் இமேஜை உயர்த்தியுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்த, காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டங்களால் மக்களுக்கு கிடைத்துள்ள நன்மைகளை விவரித்து, வாக்காளர்களின் மனதில் இடம்பிடிக்க முயற்சிக்கிறது. இதற்காக ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தலா 15 தலைவர்கள் அடங்கிய, 15 'வாட்ஸாப்' குரூப்புகள் அமைத்து, பிரசாரம் செய்யும்படி தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
வாக்குறுதி திட்டங்கள் குறித்து, ஏற்கனவே ஆதரவாக, எதிர்ப்பாக கருத்துகள் வெளியாகின்றன. குறிப்பாக பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் திட்டங்களுக்கு எதிரான கருத்துகளை சேகரிக்கின்றன.
எனவே இதற்கு பதிலடி கொடுக்க, பூத் அளவில் வாட்ஸாப் குரூப் அமைக்கப்படுகிறது. இதில் உறுப்பினர்களாகும் தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
வாக்குறுதி திட்டங்களால், மாநிலத்தின் பொருளாதாரம் சீர் குலைகிறது. வளர்ச்சி திட்டங்களுக்கு பணம் இல்லை. அரசு கருவூலம் காலியாகிவிட்டது என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திட்டங்களால் மக்களின் பொருளாதாரம் அதிகரித்துள்ளது. பணம் மிச்சமாகிறது என, பிரசாரம் செய்யும்படி தொண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குறுதி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த, கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. கமிட்டி தலைவர், உறுப்பினர்களுடன், துணை முதல்வர் சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.
இதில், அவர் பேசியதாவது:
காங்கிரசின் வாக்குறுதி திட்டங்கள், செயல்படுத்தப்பட்ட பின், மாதந்தோறும் மாநிலத்தின் வரி தொகை, 1,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
திட்டங்கள் குறித்து, மாநிலம் முழுதும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 56 சதவீதம் மக்கள், வாக்குறுதி திட்டங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.
தொகுதி வாரியாக, திட்டங்கள் குறித்து மக்களுக்கு, தொண்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஓட்டுகளாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -

