காங்., அரசை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் பேட்டி
காங்., அரசை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம் பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் பேட்டி
ADDED : மே 16, 2024 05:04 AM

பெங்களூரு : ''காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சிக்க மாட்டோம்,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் கூறினார்.
கர்நாடக பா.ஜ., பொது செயலரும், கார்கலா எம்.எல்.ஏ.,வுமான சுனில்குமார், பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, இன்னும் ஐந்து நாட்களில் ஓராண்டு முடிய போகிறது. இந்த ஓராண்டில் எந்த லட்சியமும் இல்லாத அரசை மக்கள் பார்த்து உள்ளனர். வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. வளர்ச்சியில் இந்த அரசின் மதிப்பெண் ஜீரோ. ஓராண்டில் என்னென்ன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று, அரசு அறிக்கை வெளியிட வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளுக்கு நிதி தரவில்லை. இதனால் எம்.எல்.ஏ.,க்களால் மக்களை சந்திக்க முடியவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைக்கு, இந்த அரசு நிர்வாகம் உள்ளது.
* முற்றிலும் தோல்வி
அமைச்சர்களை, முதல்வரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டம் - ஒழுங்கை கையாளுவதில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் முற்றிலும் தோல்வி அடைந்து உள்ளார். வறட்சி நிவாரண பணிகளை மேற்கொள்வதில், வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா செயல்பாடு மோசமாக உள்ளது.
காங்கிரஸ் அரசில், விவசாயிகளுக்கு மானியம் கிடைக்கவில்லை. ஒரு விவசாயிக்கு கூட புதிய பம்ப்செட் இணைப்பு கிடைக்கவில்லை. இதற்கு விவசாய அமைச்சர் செலுவராயசாமியின் கையாலாகாத்தனம் காரணம். கிராமப்புறங்களில் 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் வழங்க முடியாத, திறமையற்ற எரிசக்தி அமைச்சர் நம்மிடம் உள்ளார்.
* திறமையற்ற அரசு
பிராண்ட் பெங்களூரு என்று கூறினர். பெங்களூருவுக்கு எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலையில், துணை முதல்வர் சிவகுமார் உள்ளார். மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் வகையில், காங்கிரஸ் அரசு செயல்படுகிறது. இந்த அரசின் குளறுபடிகள் நாளுக்கு, நாள் வெளி வருகிறது.
திறமையற்ற அரசுக்கு எதிராக, பா.ஜ., போராட்டம் நடத்தும். காங்கிரசை அரசை கவிழ்க்க, நாங்கள் முயற்சிக்க மாட்டோம். அந்த கட்சிக்குள் முதல்வர் பதவிக்காக சண்டை நடக்கிறது. இந்த சண்டையால் அரசு எப்போது கவிழும் என்று, எதிர்பார்த்து காத்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
***