ஷிவமொகாவில் பிரசாரம் துவங்கிய காங்., வேட்பாளர் கீதா சிவராஜ்குமார்
ஷிவமொகாவில் பிரசாரம் துவங்கிய காங்., வேட்பாளர் கீதா சிவராஜ்குமார்
ADDED : மார் 22, 2024 06:57 AM

ஷிவமொகா: ஷிவமொகா காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ்குமார், பத்ராவதியில் பிரசாரத்தை துவங்கினார்.
லோக்சபா தேர்தலில் ஷிவமொகா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கீதா சிவராஜ்குமார் போட்டியிடுகிறார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகளும், நடிகர் சிவராஜ்குமாரின் மனைவியும் ஆவார்.
இந்நிலையில் ஷிவமொகா தொகுதிக்கு உட்பட்ட, பத்ராவதியில் இருந்து நேற்று முன்தினம் பிரசாரத்தை துவங்கினார். திறந்த வேனில் பத்ராவதி டவுன், கரேஹள்ளி கிராமத்தில் ஊர்வலமாக வந்து, ஓட்டு சேகரித்தார். அவருடன் சிவராஜ்குமார், பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர் இருந்தனர்.
பிரசாரம் முடிந்ததும் பத்ராவதியில் நடந்த, தொண்டர்கள் கூட்டத்தில் கீதா சிவராஜ்குமாரின் தம்பியும், கர்நாடக பள்ளிக்கல்வி அமைச்சருமான மது பங்காரப்பா பேசுகையில், ''கீதா அக்கா உங்கள் வீட்டு பிள்ளை. அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற்றால் ஷிவமொகா மக்கள் குரலாக இருப்பார்.
''ஷிவமொகா பா.ஜ., - எம்.பி., ராகவேந்திரா, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவரது தந்தை எடியூரப்பா ஊழல் செய்த பணத்தில், மகனை வெற்றி பெற வைத்தார்.
''பணபலத்தால் எங்கள் தந்தை பங்காரப்பாவை தோற்கடித்தனர். அவரது தோல்விக்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும்,'' என்றார்.

