காங்., என்றாலே ஊழல், கமிஷன்: பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கிண்டல்
காங்., என்றாலே ஊழல், கமிஷன்: பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கிண்டல்
ADDED : மே 01, 2024 08:25 AM

ஹாவேரி : ''காங்கிரஸ் என்றால் ஊழல், கமிஷன் என்று அர்த்தம். குடும்ப அரசியல் மற்றும் ஊழல்வாதிகளை காப்பாற்ற, இண்டியா கூட்டணி அமைத்துள்ளனர்,'' என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா குற்றஞ்சாட்டினார்.
ஹாவேரி பேடகியில், பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவாக கட்சியின் தேசிய தலைவர் நட்டா, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனத்தில் நேற்று 'ரோடு ஷோ' நடத்தினார்.
அவர் பேசியதாவது: காங்கிரஸ் என்றால் ஊழல், கமிஷன் என்று அர்த்தம். பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், எங்கள் தலைவர் நரேந்திர மோடி, பிரதமர் ஆவார் என, நாங்கள் கூறுகிறோம். ஒருவேளை எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் இருப்பர்.
எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்? கொரோனா போன்ற நெருக்கடியான சூழ்நிலையை திறமையாக சமாளித்த, மோடி போன்ற தலைவர் காங்கிரசில் உள்ளாரா?
எதிர்க்கட்சியினர், வெறும் அதிகாரத்துக்காக கூட்டணி வைத்துள்ளனர். குடும்ப அரசியலுக்காகவும், ஊழல்வாதிகளை காப்பாற்றவும், கூட்டணி வைத்துள்ளனர். இவர்களுக்கு எந்த வேலையும் இல்லை.
காங்கிரசார் ஊழல்வாதிகள். துணை முதல்வர் சிவகுமார் ஊழலில் பங்கேற்றாரா இல்லையா? ராகுல், சோனியா, சிதம்பரம், லாலு பிரசாத் யாதவ், சிவகுமார் என, பலரும் ஜாமினில் வெளியே உள்ளவர்கள், இல்லையா? டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல தலைவர்கள் சிறையில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
சாலையின் இரண்டு ஓரங்களிலும் குவிந்திருந்த மக்கள், பா.ஜ., தலைவர்களை வரவேற்றனர். பலரும் 'மோடி, மோடி', 'பாரத் மாதாகீ ஜெய்' என, கோஷமிட்டனர்.
வேட்பாளர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட பல தலைவர்கள் பங்கேற்றனர். அதன்பின் காகினெலே கனககுரு பீடத்துக்கு சென்றனர். நிரஞ்சனானந்தபுரி சுவாமிகளை சந்தித்தனர்.