'குடியுரிமை வழங்குவதில் காங்கிரஸ் தாஜா அரசியல்': உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு
'குடியுரிமை வழங்குவதில் காங்கிரஸ் தாஜா அரசியல்': உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு
ADDED : ஆக 19, 2024 01:18 AM

ஆமதாபாத்: “கடந்த 2014க்கு முன் நாட்டை ஆண்ட காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தாஜா செய்யும் அரசியலால், நம் நாட்டில் தஞ்சம் அடைந்த ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
குஜராத்தின் ஆமதாபாதில், ஹிந்து மதத்தை சேர்ந்த 188 அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழை அளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தலுக்கு ஆளாகி நம் நாட்டுக்குள் ஊடுருவிய சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க சட்டம் இயற்றப்படும் என, 2014 தேர்தலில் பா.ஜ., அளித்த வாக்குறுதியை 2019ல் நிறைவேற்றியது.
அதிகாரம் இல்லை
இதன் வாயிலாக ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள், ஜைனர்கள், பவுத்தர்கள், சீக்கியர்களுக்கு நீதி கிடைத்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததும், இங்குள்ள முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்படும் என, தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.
இந்த நேரத்தில் முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த சட்டத்துக்கு குடியுரிமை வழங்குவதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. குடியுரிமையை பறிக்க அதிகாரம் இல்லை.
பிரிவினையின் போது வங்கதேசத்தில் 27 சதவீத ஹிந்துக்கள் இருந்தனர். இப்போது, 9 சதவீதம் மட்டுமே உள்ளனர். மற்றவர்கள் என்ன ஆயினர்?
அண்டை நாட்டில் மரியாதையுடன் வாழ முடியாததால் அவர்கள் நம் நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?
எனவே தான் அவர்களுக்கான குடியுரிமையை மோடி அரசு வழங்குகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் அங்கிருந்து வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என, காங்கிரஸ் உறுதி அளித்தது. ஜவஹர்லால் நேரு இந்த வாக்குறுதியை அளித்தார்.
பெரிய பாவம்
அப்படி அளித்தால், ஓட்டு வங்கியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என அஞ்சிய காங்கிரஸ் தலைவர்கள் அந்த வாக்குறுதியை வசதியாக மறந்தனர்.
இந்த தாஜா செய்யும் அரசியல் நிலைப்பாடு காரணமாக, கோடிக்கணக்கான அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. இதை விட பெரிய பாவம் என்ன இருக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.

