குஜராத்தில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்காத காங்கிரஸ்
குஜராத்தில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பளிக்காத காங்கிரஸ்
UPDATED : மே 06, 2024 08:24 AM
ADDED : மே 05, 2024 11:50 PM

ஆமதாபாத்: குஜராத்தில் நாளை நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட இம்முறை போட்டியிடவில்லை.
குஜராத்தில், மொத்தம் 26 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், சூரத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலால், போட்டியின்றி வெற்றி பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, 25 தொகுதிகளுக்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. மொத்தம் 266 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில், முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் 35 பேர்.
வழக்கமாக ஒரு தொகுதியிலாவது முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி வந்த காங்., இம்முறை அந்த பாரம்பரியத்தை உடைத்துள்ளது. அக்கட்சி சார்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை.
'வழக்கமாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் நிறுத்தப்படும் பரூச் லோக்சபா தொகுதி இம்முறை, கூட்டணி கட்சியான ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டதால், முஸ்லிம் சமூகத்தினருக்கு சீட் ஒதுக்க முடியவில்லை' என, காங்., விளக்கம் அளித்துள்ளது.
தேசிய கட்சிகளில் பகுஜன் சமாஜ் மட்டுமே முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி உள்ளது. காந்தி நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் சார்பில், முகமது அனிஸ் தேசாய், பா.ஜ.,வின் அமித் ஷாவை எதிர்த்து போட்டியிடுகிறார். மற்றபடி, சிறிய கட்சிகள் மட்டுமே முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.