ADDED : ஏப் 18, 2024 04:28 AM
கோலார், : ''கோலார் லோக்சபா தொகுதியின் வாக்காளர் துபாயில் இருந்தாலும் அவரை விமானத்தில் வரவழைத்து, காங்கிரசுக்கு ஓட்டு போட வைத்து விமானத்திலேயே அனுப்பி வைக்க பயண டிக்கெட் ஏற்பாடு செய்யலாம்,'' என்று கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் தடாலடியாக அறிவித்தார்.
கோலார் காங்கிரஸ் வேட்பாளர் கவுதமை ஆதரித்து, காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் கோலாரில் நடந்தது. இதில், கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் பேசியதாவது:
கோலார் லோக்சபா தொகுதியை சேர்ந்த வாக்காளர்கள், பெங்களூரு, சிந்தாமணி என வெளியூர்களில் இருந்தாலும் ஓட்டு போட அழைக்க வேண்டும்.
வாக்காளர் துபாயில் இருந்தாலும் விமானத்தில் வந்து செல்ல தேவையான பயண டிக்கெட் ஏற்பாடு செய்து தரலாம். ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியம்.
கடந்த லோக்சபா தேர்தலில் அரசியலில் உரிய பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்சியையும், அதன் கொடியையும் பார்க்காமல் பா.ஜ.,வின் முனிசாமி வெற்றி பெற சிலர் காரணமாக இருந்தது உண்மை. இதை சொல்ல எனக்கு பயம் இல்லை. அவர் வெற்றி பெற்ற பின், அவரது செயல்பாடு மாறியதால் அவரை ஏற்க முடியவில்லை. ஏழை எளிய மக்கள் நேரடியாக உதவி பெற, வாக்குறுதி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.எல்.சி.,க்கள் நசீர் அகமது, அனில் குமார், பிளாக் காங்கிரஸ் தலைவர் பிரசாத் பாபு, கோலார் கவுன்சிலர் சலாவுதீன் பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
கோலாரில் நடந்த காங்கிரசின் எஸ்.சி., பிரிவு கூட்டத்தில், அதன் மாவட்ட தலைவர் தர்மசேனா பேசுகையில், ''கோலார் லோக்சபா தொகுதியில் 35 ஆண்டுகள் காங்கிரசை வளர்ச்சி அடைய செய்தவர் அமைச்சர் முனியப்பா.
''அவரை ஒதுக்கிவிட்டு, தேர்தலை எதிர்கொண்டால், காங்கிரஸ் வெற்றிக்கு ஆபத்து. அவரையும் அழைக்க வேண்டும். அவரது உத்தரவு மிகவும் முக்கியம் என கட்சியின் செயல்வீரர்கள் காத்திருக்கின்றனர்,'' என்றார்.

