ADDED : ஜூலை 23, 2024 06:21 AM

பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா நேற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கர்நாடக பழங்குடியினர் நலத்துறைக்கு உட்பட்ட கர்நாடக மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியை நாகேந்திரா இழக்க நேரிட்டது.
இந்த விவகாரத்தில் முறைகேடாக பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகார் குறித்து, அமலாக்கத்துறை அதிகாரிகள், நாகேந்திரா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். 12ம் தேதி அவரை கைது செய்தனர். பின், தங்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது.
நேற்றுடன் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். ஆகஸ்ட் 3ம் தேதி வரை, 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வழங்கி, நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் உத்தரவிட்டார்.
இதே வேளையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹைதராபாத்தைச் சேர்ந்த சத்யநாராயணா வர்மாவையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இன்று வரை தங்கள் காவலில், அமலாக்கத்துறை எடுத்தனர்.
இதன் பின், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நாகேந்திரா அழைத்துச் செல்லப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், நேற்றிரவு அடைக்கப்பட்டார்.
வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் நாகேந்திரா நேற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.